மகா சிவராத்திரி ஸ்ரீகாளகஸ்தியில் கொடியேற்றம் கோலாகலம்.. மார்ச் 9ல் தேரோட்டம்.. தெப்ப உற்சவம்
திருப்பதி: மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஸ்ரீ காளஹஸ்தி என்றால் 3 ஜீவராசிகள் உட்பட முதலாவதாக நினைவிற்கு வருபவர் பக்த கண்ணப்பர். இவர் தன்னுடைய கண்களை சிவபெருமானுக்கு கொடுத்து முக்தி அடைந்தவர். காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் முதல் பூஜை செய்தவர் பக்த கண்ணப்பர். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா தேரோட்டமும் தெப்ப உற்சவமும் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
சிவபெருமானின் பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட தலம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் 500 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் முதல் பூஜை பக்த கண்ணப்பருக்கு. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி முதல் நாள் பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

கண்ணப்பர் தன்னுடைய கண்களை சிவபெருமானுக்கு கொடுத்தவர். வேடர் இனத்தை திண்ணன் சிவ பெருமானின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொறுக்க முடியாமல், தன் இரு கண்களையும் பக்தியோடு சமர்ப்பித்ததால் பக்த கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
பக்தர்களால் பூலோகக் கைலாசம் என்று பெயர் பெற்ற ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரர் கீழே தங்கி, கண்ணப்பருக்கு கைலாச மலையில் இடம் அளித்திருப்பது, பக்தர்கள் கடவுளை விட பெரியவர்கள் என்பதற்கு சான்றாகும். மேலும் பிரமோற்சவத்தின் முதல் நாள் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் விழா தொடங்குவது இங்கு வழக்கம்.
இதையொட்டி காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய வழக்கத்தின் படி, பக்த கண்ணப்பருக்கு முதல் பூஜை செய்யப்பட்டது.
13 நாட்கள் நடக்கும் மகா சிவராத்திரி பிரமோற்சவ விழாவின் முதல் நாள் அங்குரார்ப்பணம் பக்த கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக காளஹஸ்தி சிவன் கோயில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து சிவன் பார்வதி உச்சமூர்த்திகளை கண்ணப்ப மலை மீது ஊர்வலமாக கொண்டு செல்ல சென்றனர்.
அங்கு வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்ததோடு கண்ணப்பர் கொடியேற்றம் நடந்தது. தேவர்களை பிரமோற்சவத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் காளஹஸ்தியை சேர்ந்த வேடர் சமூகத்தினர் உபதாரர்களாக முன்னின்று பிரமோற்சவத்திற்காக கைலாசகிரி மலைகளில் வீற்றிருக்கும் தேவர்கள் முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடந்தது.

மலையில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில், கோயில் தலைமை அர்ச்சகர்கள் சுவாமிநாதன் முன்னதாக கலசம் அமைத்து, பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தேவஸ்தானம் வழங்கிய துணியை கொடி மரத்தில் ஏற்றி பிரமோற்சத்திற்கான கொடியை ஏற்றினர். அப்போது பக்தர்கள் 'ஹர ஹர மஹா தேவா’ 'ஷம்போ சங்கரா’ என்று பக்தி முழக்கமிட்டனர்.
மகா சிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி காளஹஸ்தீஸ்வரலாயத்தில் முதல் பூஜை செய்த பக்த கண்ணப்பர் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து நகர பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு குடைகள், கோலாட்டங்கள், மர பஜனைகள், மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது.

வரும் 08ஆம் தேதி மகா சிவராத்திரியையொட்டி, நந்தி வாகன சேவை மற்றும் இரவு லிங்கோத்பவ தரிசனம், 09ஆம் தேதி காலை தேர்த்திருவிழா மற்றும் அன்றிரவு தெப்போற்சவம் நடைபெறும். 10ஆம் தேதி இரவு சிவ-பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். 12ஆம் தேதிசுவாமி திருக்கையிலாய ஊர்வலம் கிரிவலமும், 13ஆம் தேதி கொடியிறக்கம், 14ஆம் தேதி பூப்பல்லக்கு சேவை, 15ஆம் தேதி ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளது. 16ஆம் தேதியன்று சாந்தி அபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, காளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.












Click it and Unblock the Notifications