பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம்.. அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நேரத்தில் அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் நாளை முதல் ஊர்வலமாக புறப்படுகிறது. இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். தங்க ஆபரணங்கள் அணிந்து அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மகர விளக்கு பூஜை: ஐயப்பனை காண்பதற்காக கடுமையாக விரதமிருந்து வரும் பக்தர்கள் இருமுடி ஏந்தி கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பாடிக்கொண்டே சபரிமலைக்கு வருகின்றனர். 41 நாட்கள் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 15 ம் தேதி மாலை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகர ஜோதி தரிசனம்: மகர விளக்கு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும் சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிரும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க தங்க ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். பொன்ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சி அளிக்கும் ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகர விளக்கு பூஜையைக் காண வருவார்கள்.
திருவாபரணப்பெட்டி: ஐயப்பனின் புனித தங்க நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது. பந்தளம் அரண்மனையின் பொறுப்பில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்படுகிறது. சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது.
பந்தள அரண்மனை: பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள். பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக பந்தளமன்னர் குடும்ப பிரதிநிதி உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.
திருவாபரண ஊர்வலம்: திருவாபரணத்தின் மூன்று நாள் ஊர்வலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி தொடங்கும். சில ஆண்டுகளில் 13ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு நாளை 13ஆம் தேதி சனிக்கிழமை திருவாபரண ஊர்வலம் தொடங்குகிறது. அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். இந்த ஆபரண பெட்டிக்கு காவலாக கூடவே கருடன் பறந்து வரும்.
3 பெட்டிகள்: திருவாபரணம் சபரிமலை கோவிலுக்குள் செல்லும்போது, ஊர்வலத்தின் மூன்றாம் நாளாகிய மகர ஜோதி தரிசனம் நடைபெறும். பொன்ஆபரணங்களை அணிந்த ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். திருவாபரணப் பெட்டி மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது. திருவாபரணப் பெட்டி,வெள்ளிப் பெட்டி,கொடிப் பெட்டி திருவாபரணப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு கொடிப்பெட்டி கொண்டு செல்லப்படும்.
என்னென்ன இருக்கும்: ஐயப்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்ம சாஸ்தாவை அலங்கரிக்கும் ஆபரணங்கள் உள்ளன. திருமுகம், ப்ரபா மண்டலம், பெரிய கத்தி, சிறிய கத்தி, யானை விக்ரஹம், புலி விக்ரஹம், வெள்ளியால் சுற்றப்பட்ட வலம்புரி சங்கு, பூக்களை வைக்கும் தங்கத்தட்டு, பூர்ணா, புஷ்கலா தேவியர் உருவம், நவரத்தின மோதிரம், சரப்பளி மாலை, தங்க இதழ்களால் ஆன வில்வ மாலை, நவரத்தினங்களால் ஆன மணிமாலை, தங்க எருக்கம்பூக்களால் ஆன மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.
யானையில் பவனி: வெள்ளிப் பெட்டியில் தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்ரங்களும் இருக்கின்றன. இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும். மூன்றாவது பெட்டியான கொடிப்பெட்டியில் யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள் குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன. கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மாளிக்கப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவார்கள்.
அரசனாக ஜொலிக்கும் ஐயப்பன்: திருவாபரணம் ஊர்வலத்தையும் அந்த ஆபரண பெட்டி சன்னிதானத்தை அடைவதை காண்பதே ஒரு பரவசமான அனுபவமாக இருக்கும். ஜனவரி 15ஆம் தேதி வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் கருடன் வட்டமிட அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடக்கும். தங்க ஆபரணங்களில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்கு பக்தர்களுக்கு பேரானந்தம் ஏற்படும். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும். அந்தக் கணமே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் பார்ப்பது தனி பரவசம். மெய்சிலிக்கும் அந்த அனுபவத்தை வர்ணிக்க வார்தைகள் கிடையாது.
குவியும் பக்தர்கள்: மண்டல பூஜை காலத்தை போலவே மகரவிளக்கு காலத்திலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் தரிசனம் செய்வதற்கு தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
மகர விளக்கு பூஜை: இதற்கிடையே சபரிமலையில் வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் சபரிமலையில் தொடங்கி உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாளில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் அனுமதி: பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளைய தினம் 13ம் தேதி வரை மட்டுமே தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 14ம் தேதி 50 ஆயிரம் பேரும், 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 18ஆம் தேதி வரை பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம்.
சபரிமலை நடை அடைப்பு: 19ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்த முடியும். 20ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. 21ஆம் தேதி காலை 7 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். அதன்பிறகு மாசி மாத பிறப்பு பூஜைக்காக பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications