திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 11: மார்கழியில் தோழியை தூக்கத்திலிருந்து எழுப்புவது ஏன் தெரியுமா?
திருப்பாவை - பாடல் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: கன்றுகளுடன் கூடிய பசுக்களிடம் இருந்து பால் கறப்பவனே! தங்களை பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மைக் கொண்டவனே கோபாலனை தழுவ துடிக்கிற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தை போல் அல்குலை உடைய மயில் போன்றவளே! அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா தோழிகளும் உன் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். மேக வண்ணனாகிய கண்ணனை புகழ்ந்து பாடுகிறார்கள். செல்வத்தையும் பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! அர்த்தமே இல்லாத உன்னுடைய தூக்கத்திற்கு என்ன பலன் கிடைக்க போகிறது?
விளக்கம்: தூங்கிக் கொண்டிருந்தாலும் அந்த தோழியை விட்டுவிட்டு நீராட செல்லாதது ஏன் தெரியுமா, இது பக்திக்கு உகந்ததல்ல! பிறரை விட்டுவிட்டு தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காது. எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்குத்தான் மகத்துவம் அதிகமாக இருக்கிறது.
திருவெம்பாவை பாடல் - 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: ஈசனே! உன் அடியவர்களான நாங்கள் எல்லாம் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணி பாடினோம். சிவந்த நெருப்பை போன்றவனே! உடல் முழுவதும் திருநீறு அணிந்தவனே! அழகிய கண்களை உடைய பார்வதியின் மணாளனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவர் என்னவெல்லாம் நன்மையடையுமோ அவை அனைத்தையும் அடைந்துவிட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க செய்வாயாக!
விளக்கம்: மனிதனுக்கு மட்டும்தான் பேசும் சக்தி உள்ளது. எனவே இந்த பிறவியில் நமது வாய்ப்பேச்சை பயன்படுத்தி, உண்பதற்கு முன்பு படியலந்ததற்கு நன்றிக் கடனாக நிம்மதியான உறக்கம் வருவதற்கும் ஓம் நமச்சிவாய என்ற திருநாமத்தை சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications