Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 7 Margazhi,thiruppavai pasuram 7

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பாவையின் ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள்.

திருப்பாவை - பாசுரம் 7

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

Margazhi Pavai Nonbu 2023: Thiruppavai, Thiruvempavai Songs 7

பாடல் விளக்கம்:ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம்துணையுடன் கீச்... கீச்...என்று ஒலி எழுப்பும். அவை கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.

திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே... தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக மத்தை கடைகின்றனர்.

கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.

நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா?
ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே உடனே எழுந்து கதவு திறந்து பாவை நோன்பு நோக்க வாராய் என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லாப் பெண்களையும் அழைக்கிறாள்.

மந்தார மலையை மத்தாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்ததாலன்றோ அமிர்தம் கிடைத்தது. அதேபோல், தினந்தோறும் இந்தப் பாடலைப் பாடி உள்ளம் என்னும் பாற்கடலில் அவனுடைய திருநாமத்தை உச்சரித்து வந்தால், கடைந்தால் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைப்பது போலவே, அவனுடைய பேரருள் கிடைக்கும் என்பது உறுதி!

திருவெம்பாவை - பாசுரம் 7

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: தேவர்கள் உள்ளிட்ட பலரும் எளிதில் அணுக முடியாதவன் அவன். தேவர்களும், மற்றவர்களும் அவனை தரிசிக்க காத்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் புறப்பட்ட தயாராகி விட்டார் என்பதை உணர்த்தும் வகையில் சிவ சின்னங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சிவ சின்னங்கள் பலரும் ஒலிக்க துவங்கியதும், தென்னாடுடைய சிவனே போற்று என சொல்வதற்காக தென்னா என வாய் திறந்ததும், ஓடி வந்து, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என இறைவனை போற்றி, போற்றி என புகழ்ந்தவள் நீ. ஆனால் இன்று சிவனை பற்றி இத்தனை நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறாயே.

இந்த தூக்கம் உனக்கு என்ன கொடுத்தது? இத்தனை சொல்லியும் அந்த இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் சோம்பேறி போல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்ற அவப் பெயரைத் தான் பெற்று தந்தது. தூக்கத்தில் சுகம் கண்டு கொண்டிருந்தால் உலகத்தாரின் அவப்பெயர் தான் கிடைக்குமே தவிர இறைவனின் அருள் கிடைக்காது என்று கூறி உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+