ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது? வழிபடுவது எப்படி?
சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் குழந்தைகள் புதிதாக கல்வி கற்பதற்கு தேவையான உகந்த நேரத்தையும் கொடுத்துள்ளோம். இதை வைத்து உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!
நவராத்திரியின் கடைசி நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் முடிவடையும். அடுத்த நாள் இந்த 9 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி என்பது தேவர்களுக்கு அசுரர்கள் கடுந்தொல்லை கொடுப்பர். அவர்கள் மக்களுக்கும் இடையூறாக இருப்பர். அவர்களை அழிக்க கடும் தவம் புரிய வேண்டும் என்பதால் அவர்களை துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களும் 9 நாட்களும் கடும் தவம் இருந்து அழிப்பர்.
இதுதான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் அம்பாள் துர்கா தேவியாகிறாள். அதற்கு அடுத்த நாட்கள் லட்சுமியாகவும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் மாறுகிறாள். இதன் மூலம் ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் அவசியம் என உணர்த்துவதே நாம் இந்த நவராத்திரியை கொண்டாடுகிறோம்.
ஆயுத பூஜை: நவராத்திரியின் 9ஆவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணக் கதைகள் உண்டு. இதை நினைவுப்படுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் பயன்படுத்தும் ஆயுதங்களையும், நம் வாழ்விற்கு வளத்தை கொடுக்கும் பொருட்களையும் வைத்து வழிபடுகிறோம். உதாரணமாக ஆட்டோ வைத்து பிழைத்து வருகிறார்கள் என்றால் அவர்கள் ஆட்டோவுக்கு பூஜை செய்வார்கள்.
அது போல் எலக்டிரிக்கல் வேலை செய்வோர் அதற்கு தேவையான பொருட்களை வைத்து பூஜை செய்வர். பெண்கள் வீட்டில் பயன்படுத்தும் கத்தி, அரிவாள், தோசை கல், பூட்டை காக்கும் பூட்டு சாவி, இஞ்சி, பூண்டு அரைக்கும் சிறிய உரல், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்வர்.
அது போல் மாணவர்களுக்கு புத்தகம்தான் ஆயுதம். அவர்கள் சரஸ்வதி பூஜை அன்று தாங்கள் படிக்கும் புத்தகங்களை வைத்து வழிபடுவது வழக்கம். எனவே ஆயுதங்களை வைத்து வழிபடுவதால் இது ஆயுத பூஜை என்றும் புத்தகங்களை வைத்து வழிபடுவதால் சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
விஜயதசமி: நவராத்திரியின் நிறைவாக 10 ஆவது நாளில் அம்பிகை, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றியை கொண்டாடுவதே விஜயதசமியாகும். இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குதல், புதிய கணக்கு தொடங்குதல், கல்வி பயில உகந்த நாளாகும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நாளாகும். அன்றைய தினம் நெற்பயிரில் குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழி கல்வி கற்பிக்கப்படும்.
பூஜை செய்வது எப்படி: வீடு, வாசல், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீரை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டு அதில் சந்தனத்தையும் குங்குமத்தையும் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்துவிட்டு பூக்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பிறகு ஒரு மனைக் கட்டையை வைத்து அதில் புத்தகங்களுக்கு பொட்டு வைத்து அடுக்கி வைக்கவும். அது போல் கத்தி, லைட்டர், அரிவாள், உள்ளிட்டவைகளையும் சுவாமி முன்பு வைக்க வேண்டும். பின்னர் விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டு, சுண்டல், பொரிக் கடலை, வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் வைத்து படைக்க வேண்டும்.
நல்ல நேரம் எது: எல்லாம் சரி! இந்த பூஜை செய்ய நல்ல நேரம் எது தெரியுமா? இதுகுறித்து சொற்பொழிவாளர் மங்கையர்க்கரசி கூறியதாவது: சரஸ்வதி பூஜை அன்றும் வித்யாரம்பம் செய்யலாம். நாளை வித்யாரம்பம் செய்ய நல்ல நேரம் காலை 8.20 மணி முதல் 10.20 மணி வரை.
அது போல் சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரமும் காலை 8.20 மணி முதல் 10.20 மணி வரை. மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. மாலை நேரத்தில் பூஜை செய்வோர் , மாலை 6 மணிக்கு மேல் செய்துக் கொள்ளலாம். இந்த 3 நேரங்களில் அவரவருக்கு தோது வரும் நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications