நவராத்திரி.. ராஜ்பவனில் கொலு.. மயிலாப்பூரில் சக்தியை பார்த்து பூரித்துப்போன துர்கா ஸ்டாலின்
சென்னை: நவராத்திரி பெருவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி குத்துவிளக்கு ஏற்றினார். மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொலு மண்டபத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் துர்கா ஸ்டாலின்.
அலைமகள், மலைமகள், கலைமகள் முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி பெருவிழா. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை போற்றும் வகையில் 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு.

கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு. சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம்.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் சென்னை கிண்டியில் ராஜ்பவனில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் 5 படிகளில் விநாயகர், பார்வதி தேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, தசாவதாரம், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், நடராஜர், துர்க்கை, கருப்பசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவருடைய மனைவி லட்சுமி ரவி, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் கர்நாடக, இன்னிசைக் கச்சேரிகள், துர்கா நடனம் நடைபெற்றது.

'நவராத்திரி விழா 15 ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் தினசரி மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை ஒரு மணிநேரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நவராத்திரி கொலுவை தினசரி மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பத்து நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருந்த அறிக்கையில் உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு நாள் நிகழ்வின்போதும், மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாணவ, மாணவியர் பங்குபெறும் சகலகலாவல்லி மாலை பூஜையுடன் தொடங்கி, இரவு 7 மணிக்கு மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

மயிலாப்பூரில் நேற்று மாலை நவராத்திரி பெருவிழாவை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பிரம்மாண்ட கொலுவை பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டினார். இதனை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்
நவராத்திரி கொலு தொடக்க நிகழ்ச்சியில் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் MP, மயிலை த.வேலு MLA, அரசு முதன்மை செயலாளர் டாக்டர் க. மணிவாசன், ஆணையர் திரு.முரளீதரன் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்களும் மாணவ மாணவியர்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications