திருப்பதிக்கு ஜனவரி 7ஆம் தேதி போக பிளானா? இந்த தரிசனம் எல்லாம் ரத்தாமே!
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 7ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 10 -ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறப்பையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து என சொல்லப்பட்டுள்ளது, அப்படியிருக்கும் போது ஜனவரி 7ஆம் தேதி ஏன் தரிசனம் ரத்து என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, ஆனிவார ஆஸ்தானம், உகாதி பண்டிகை , வைகுண்ட ஏகாதசி விழா என ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மை பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஜனவரி 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படுகிறது. இதனால் ஜனவரி 7ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன.
தூய்மைப் பணி முடிந்ததும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு ஜனவரி 7ஆம் தேதி கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் ஜனவரி 6 ஆம் தேதியே விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கு பகத்ரகள் ஒத்துழைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
9 இடங்களில் கவுன்ட்டர்கள் திறப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 10 நாட்களுக்கு பக்தர்கள் துவார தரிசனம் வழியே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் கடந்த 24ம் தேதி விற்றுத் தீர்ந்தது. 25 நிமிடங்களில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.
இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் தீர்ந்த நிலையில் இனி இலவச தரிசன டோக்கன்களை பெற்று சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம். இதற்காக 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications