சபரிமலை மகரவிளக்கு, மகர ஜோதி பூஜை.. 40000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.. ஸ்பாட் புக்கிங் கிடையாது
சபரிமலை: மகர விளக்கு, மகர ஜோதி விழாவிற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் தயாராகி வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையை முன்னிட்டு முன்பதிவு 40,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் வசதியை தேவசம்போர்டு நிறுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலக புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு மகரஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில், கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதி நடந்து முடிந்தது. மண்டல பூஜைக்காக ஐயப்பன் சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டது. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 41 நாட்களில் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முதல் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்து வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தையும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அதிகரித்துள்ளது. அதன்படி, அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலையில் சிகர நிகழ்ச்சியாக வரும் ஜன்வரி 15 ஆம் தேதி மகர விளக்கு மற்றும் மகர ஜோதி பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், ஸ்பாட் புக்கிங் வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைன் புக்கிங் Virtual queue முன்பதிவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி 50,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகர ஜோதி அன்று அதாவது ஜனவரி 15 ஆம் தேதி 40,000 பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதி அதிக கூட்டம் இருக்கும் காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மல்லிகாபுரம் மற்றும் மணிகண்டாஸ் வழியாக தரிசனம் செய்ய வேண்டாம் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் பக்தர்கள் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளதால் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications