அபிஷேகத்தின் போது சட்டென மறைந்த சாய்பாபா சிலை..மாலை மட்டும் தெரிந்த அதிசயம்..ஈரோடு பக்தர்கள் பரவசம்
ஈரோடு: சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து அபிஷேகம் நடந்த போது கருவறையில் இருந்த சாய்பாபா சிலை சட்டென்று மாயமான அதிசய நிகழ்வு ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. சிலைக்கு பதிலாக அந்த சாய்பாபா சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை மட்டுமே புகைப்படத்தில் தெரிந்தது கண்டு பக்தர்கள் பரவச மடைந்தனர்.
மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய் பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது. சாய் பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும் என்கிற நம்பிக்கை உண்டு. இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பக்தர்களின் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார் சீரடி சாய்பாபா. சாய் பாபாவின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை காண சீரடிக்குச் செல்கிறார்கள். நாடு முழுவதும் சாய்பாபாவிற்கு பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சீரடிக்கு சென்று வணங்கி அதன் மூலம் வாழ்க்கையில் வளர்ச்சியடைந்தவர்கள் தங்கள் ஊரிலேயே சாய்பாபாவிற்கு ஆலயம் எழுப்பி வழிபடுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒரு குடிசைக்குள் சாய்பாபா சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வந்தார். பக்தர்களின் வருகை அதிகரிக்கவே அந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது.
கருவறையில் 8 அடி உயரத்தில் பளிங்கு கல்லால் ஆன ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு இருந்தனர்.

சாய்பாபவிற்கு அபிஷேகம் நடப்பதை சிலர் தங்களின் கேமிரா, செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒருவரின் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவில் கருவறையில் இருந்த 8 அடி உயர ஷீரடி சாய்பாபா சிலை மறைந்து இருந்தது. ஆனால் சாய்பாபா கழுத்தில் இருந்த மாலை மட்டும் தனியாக பதிவாகி இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் போட்டோ, வீடியோ எடுத்த போது சாய்பாபா சிலை பதிவாகி இருந்தது. சாய்பாபா சிலையானது சட்டென்று மறைந்து மீண்டும் தோன்றியதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications