நரசிம்மர் ஜெயந்தி..நாராயணா என்று அழைத்தால் ஓடோடி வருவார்..வேண்டிய வரம் தரும் கீழப்பாவூர் நரசிம்மர்
தென்காசி: நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை ரட்சிக்க தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார் நரசிம்மர். வரும் 4ஆம் தேதி நரசிம்மர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் திருநட்சத்திரம் சுவாதியாகும். வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர். பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. இதனால், காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர். அவர்களுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக எழுந்தருளிய தலம் கீழப்பாவூர்.
பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது. இச்சிறுவனின் தாத்தா காசியப்பர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். தன் பேரன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம சொரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர்.
முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது.
"பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். நரசிம்மர் தரிசனம் காண்பீர்கள்!" என்பதே இறைவன் அருளிய வாக்கு. புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தார்.

ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து தம் இதயக்கதவைத் திறந்தார் மகாவிஷ்ணு. அக்கணமே, ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் வடிவில் அவதார சொரூபியாகக் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், பக்தப் பிரபுவே! தாங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும் என்று வேண்டியதும் அப்படியே ஆகட்டும்! என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.
கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம். சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.
ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.
மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.

அக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய- கீழப்பாவூரில் இருந்த 'முனைஎதிர் மோகர்' படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான். முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோவிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.
இங்குள்ள பெருமாளுக்கு 'முனைஎதிர் மோகர் விண்ணகர்' என்னும் பெயரும் உண்டு. 'முனைஎதிர் மோகர்' என்பதற்கு 'போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்' என்பது பொருளாகும். போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோவில் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு 'முனைஎதிர் மோகப்பேரேரி' என்று பெயர் சூட்டியுள்ளான் பாண்டிய மன்னன்.
இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.
இங்கு சுவாதி, திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் 'தீர்த்த வல வழிபாடு' நடக்கிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன.
சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது.
நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது. இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார்.
உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.
தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர்.
நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வெங்கடாஜலபதி-நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம் வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று முழுப்பலனும் கிட்டும். இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ளது. வரும் 4ஆம் தேதி நரசிம்ம ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. மே 5ஆம் தேதி சுவாதி திருநாள் பூஜையும் நடைபெற உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications