கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்.. தலையா? கடல் அலையா? ஆவணி தேரில் அசைந்தாடி வந்த செந்தில்குமரன்
தூத்துக்குடி: தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழர் போற்றும் குமரப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்து மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா புகழ் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்றது. சூரசம்ஹாரத்துக்கு அடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணிதிருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக 12 நாட்கள் நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இவ்விழாக்களின் முக்கிய திருவிழாவாக ஐந்தாம் நாள் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழாம் திருநாள் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும், எட்டாம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலை வெள்ளை சாத்தி கோலத்திலும் நண்பகல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் உற்சவர் சண்முகர், அம்பாள் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டமானது நடைபெற்று வருகின்றது. தேரோட்டதினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வ ரூபம் தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவின் பத்தாம் திருவிழாவான இன்று சரியாக 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் வலம் வந்தது .
அதை தொடர்ந்து மூன்றாவதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பல்லாயிரகணக்கான பக்தர்களால் வடம் பிடித்து அரோகரா என பக்தி கோசங்கள் எழுப்ப வலம் வந்து நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த நிலையில் திருச்செந்தூரே மக்கள் தலைகளாக காணப்படுகிறது.
நிகழ்வையொட்டி, கோவில் யானை முன்னே செல்ல, பக்தர்கள் தேரை வடம் பிடித்து பின்னே வந்தனர். இதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்ற சம்பவங்களை தவிர்க்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications