நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு..திருச்செந்தூரில் ஆவணி திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் முருகன்
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 24ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் ஆவணி திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று, உற்சவர் சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தமிழர் போற்றும் குமரப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்து மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா புகழ் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உத மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடி மரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. ஆவணித் திருவிழா கோலாகலகமாக நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். 12 நாள் நடைபெறும் திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அந்த வகையில், ஆவணி திருவிழாவின் 7ஆம் திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்டம் அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்து வருகிறது. சண்முகர் காலை 8.45 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து குளிர்ச்சியும் வாசனையும் கொண்ட வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். நேர்மறை எண்ணங்களையும் செல்வ வளத்தையும் தந்திடும் வெட்டி வேர் அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற பக்தர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் பக்தர்களுக்கு உற்சவர் சண்முகர் காட்சி அளித்தார்.
தொடர்ந்து சண்முகவிலாச மண்டபத்திலிருந்து எழுந்தருளிய சண்முகர் தூண்டிகை விநாயகர் கோவில் அருகேவுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு முருகனை வழிபாடு செய்தனர். மாலை சுவாமியும் அம்பாளும் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.
எட்டாம் நாளில் (31.08.2022) பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி காட்சி கொடுக்க உள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications