கண் மலரில் தன்னருளைக் காட்டி வரும் கந்தா.. பச்சை கடைசல் சப்பரத்தில் சுப்பிரமணியர்! உருகிய பக்தர்கள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாள் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த நிலையில், ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில், திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழர் போற்றும் குமரப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்து மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா புகழ் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உத மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடி மரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. ஆவணித் திருவிழா கோலாகலகமாக நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். 12 நாள் நடைபெறும் திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் ஆவணி திருவிழாவின் எட்டாம் திருநாளில் சுவாமி சண்முகர், வள்ளி தெய்வானையுடன், இன்று வெண் பட்டுடுத்தி வெள்ளை மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மாவின் அம்சமாக 8 வீதிகளிலும் வெள்ளி சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனையடுத்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி மண்டபத்திற்கு வந்தடைந்தார். இங்கு சுவாமி சண்முகருக்கு பால், மஞ்சள், விபூதி, தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பல வகையான அபிஷேகங்கள் நடந்தது.

இந்த அபிஷேகத்தை திரளான பக்தர்கள் கண்டு அரோகரா கோசமிட்டும் முருகனின் புகழை பாடியும் பய பக்தியுடன் வணங்கினர். அதைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை பட்டுடுத்தி, மரிக்கொழுந்து, திருநீற்றுப்பச்சிலை போன்ற பச்சை வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காக்கும் கடவுளான திருமாலின் அம்சமாக எட்டு ரத வீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் வலம் வரும் முருகப்பெருமானை காண்பதற்கு எண்ணற்ற பக்தர்கள் தேங்காய், பழம் பன்னீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications