வைகுண்ட ஏகாதசி..திருப்பதியில் ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு..ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ரிலீஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ரூ.300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். இதன்காரணமாக அங்கு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
இதனையொட்டி திருப்பதியில் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதே போல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் ஒதுக்கப்பட உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் திருப்பதியில் மட்டுமே பெற முடியும். இதனால் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், தேவையற்ற கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சொர்க்க வாசல் திறக்கப்படும் நாள் அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வியாழக்கிழமை 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பக்தர்கள் வர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது விஐபிகள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications