மலை மீது பறந்த ட்ரோன்.. பரபரத்த திருப்பதி.. புகார் அளித்த பக்தர்கள்.. வீடியோ எடுத்த நபரிடம் விசாரணை
திருப்பதி: திருமலை திருப்பதி மலைப்பாதையில் அனுமதி இல்லாமல் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த இராணுவ அதிகாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருமலையின் ஆகம சாஸ்திரப்படி கோயிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

இதனிடையே, இந்தக் கோயிலுக்கு நீண்டகாலமாகவே தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்கும் நோக்கில் பிரத்யேகமாக ஆக்டோபஸ் எனும் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 90 பேர் கொண்ட இந்தப் படைப்பிரிவு 24 மணிநேரமும் கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த ஆக்டோபஸ் படைப்பிரிவு திருப்பதி கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம் மற்றும் திருமலையின் ஆகம சாஸ்திரப்படி கோயிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்பதி அலிபிரியில் இருந்து மலைப்பாதை திருமலையில் ட்ரோன் கேமராவில் வீடியோ பதிவு செய்ய பாதுகாப்பு காரணங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தினேஷ் எனும் பக்தர் தனது மனைவியுடன் சுவாமி தரிசனத்திற்கு பிறகு திருப்பதி காரில் செல்லும் வழியில் மலைப்பாதையில் 52-வது வளைவில் மொகல்லா மெட்டு மலையில் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தார்.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் தினேஷ் மற்றும் அவரது மனைவியை திருமலை விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் தினேஷ் இராணுவத்தில் எஸ்.பி. கேடர் அதிகாரி என்பதும் தேவஸ்தான நிபந்தனைகள் தனக்கு சரியாக தெரியாததால் இயற்கை காட்சிகளை வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து தினேஷை போலீஸ் விசாரணைக்கு ஒப்படைத்தனர். போலீசார் தினேஷ் ட்ரோன் கேமரா மூலம் வேறு எந்தந்த பகுதிகளை வீடியோ எடுத்தார் என்பது குறித்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானாவை சேர்ந்த தினேஷ் எனும் பக்தர் மலைப்பாதையில் லைட் வைட் நானோ ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
தேவஸ்தான நிபந்தனைகள் தனக்கு தெரியாது என்று தெரிவித்த நிலையில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அலிபிரி சோதனை சாவடியில் நானோ லைட் வைட் ட்ரோன் என்பதால் அதனை சோதனை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications