திருமலை பிரம்மோற்சவம்.. கவுனி தாண்டும் திருக்குடைகள்.. ஏன் எதற்கு.. இப்படி ஒரு சுவாரஸ்ய பின்னணி
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு நிழல் தரும் வெண்பட்டுக்குடைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இன்று ஊர்வலமாக புறப்படுகிறது. திருமலை பிரம்மோற்சவம் தொடங்கும் முன்பாக திருக்குடைகள் இன்று கவுனி தாண்டுகின்றன என்று மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள் அது ஏன் எதற்கு என்பது பற்றிய சுவாரஸ்ய பின்னணியை பார்க்கலாம்.
தமிழகத்திற்கும் ஏழுமலையானுக்கும் உள்ள தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது. புரட்டாசி பிறந்து விட்டாலே எங்கும் கோவிந்தா நாமம்தான். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் மட்டுமல்லாது திருப்பதிக்கும் படையெடுப்பார்கள். புரட்டாசியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பிரம்மோற்சவம் என்றால் கேட்கவே வேண்டாம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையான் சேவைக்காக ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாகச் சென்று, திருமலையில் மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படும். 22ஆம் தேதி கருடசேவை நாளில் ஏழுமலையானுக்கு இந்த புதிய குடைகள் நிழல் தரும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்தத் திருக்குடைகள், கருடசேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உற்சவங்களில் பயன்படுத்தப்படும்.
திருமலை பிரம்மோற்சவம் வரும் 18ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கருடக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதற்கு முன்பாக குடைகள் இன்று கவுனி தாண்டுகின்றன என்று மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். வடசென்னையில் திருக்குடை ஊர்வலம் மிகப்பெரிய விழாவாக நடைபெறுகிறது.
இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசனம் செய்ய கூடுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏழுமலையான், தனது திருமணத்திற்காக யானை கவுனியில் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள்.
திருமலை ஏழுமலையானுக்கு வரும் 18ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் போது கோயில் உற்சவர் மலையப்பசாமியை தினமும் காலை மாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள். இவை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது.
இந்த குடைகள் பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்கள் போன்றவற்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடனும் ஐந்து அல்லது ஆறு குடைகள் தயாரிப்பார்கள். சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும். இவற்றை திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க, சென்னையில் இருந்து சாலைகள் வழியே எடுத்துச் செல்லும் வைபவத்துக்குத்தான் திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்று பெயர்.
திருக்குடை ஊர்வலம் இன்று தொடங்குகிறது. மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அழகான குடைகள் ஆடி அசைந்து வரும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். இவைதவிர, பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேசப் பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வரும் குடைகள் மாலை 4.30 மணிக்கு கவுனி தாண்டி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பல ஊர்களை கடந்து செல்லும் இந்த குடைகள் செப்டம்பர் 21ஆம் தேதியன்று திருமலையை சென்றடைகிறது. திருமலையில் மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் மாலை 3 மணிக்கு முறையாக சமர்ப்பணம் செய்யப்படும். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரதானமான வைபவம். இந்த ஆண்டு 22ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு புதிய குடைகள் நிழல்தரும்.












Click it and Unblock the Notifications