வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு! பயிற்சி பெற்ற பிராமணரல்லாத அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் பங்கேற்பு
சென்னை: திருச்சி வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை தகர்க்கப்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு மற்றும் ஜெயபாலன் இருவரும் இன்று வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் முருகப் பெருமானின் அறுபடை வீடு திருத்தலங்களைப் போல பிரசித்தி பெற்றது திருச்சி குமாரவயலூர் முருகன் கோவில். இக்கோவிலில் இன்று குடமுழுக்கு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் பங்கேற்று சரண கோஷம் எழுப்ப குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களான ஜெயபாலன், பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்று குடமுழுக்கு பணிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசால் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் சட்டத்தின் கீழ் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் பங்கேற்க கூடாது என பரம்பரை அர்ச்சகர்களான சிவாச்சாரியார்கள் தடை விதித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. இந்த முள்ளை அகற்றும் போராட்டம் இன்றளவும் நீடிக்கிறது. எப்போது முடியும் என தெரியவில்லை. திமுக ஆட்சியின் சாதனைகள் பலவற்றில், கருவறைத் தீண்டாமையை அகற்ற முதல்வர் எடுத்த முயற்சியே வரலாறு போற்றும் நிகழ்வு. கடந்த 2021-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 24 பேரை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தார். அந்த அர்ச்சகர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை இந்துத்துவ அமைப்புகள் கொடுத்து வந்தாலும் அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பிராமணர் அல்லாத அர்ச்சகர்களும் பெற்றுள்ளனர் வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்வில், தமிழக அரசின் அர்ச்சகர்களை, பரம்பரை அர்ச்சகர்கள் என்று சொல்லும் சிவாச்சாரியாரகள் ஒதுக்கி வைத்துள்ளனர். தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து அரசு அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு புகார் அளித்துள்ளனர் என குமுறலை கொட்டியிருந்தார்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசு நியமித்த அர்ச்சகர்களான பிரபு, ஜெயபாலனை குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனடிப்படையில் இன்றைய குடமுழுக்கு நிகழ்வில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் உள்ளிட்டவைகளில் தமிழக அரசின் அர்ச்சகர்களான பிரபு, ஜெயபாலன் இருவரும் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திருச்சி, வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (19.02.2025) நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை & கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட, கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இச்சாதனைகளால் மனம் மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications