புரட்டாசியில் புரட்டி எடுத்த மழை! திருப்பதியில் தரிசனத்தை திடீர்னு ரத்து செய்த தேவஸ்தானம்
திருப்பதி: திருமலை திருப்பதியில் கனமழை பெய்து வருவதால் இன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. மேலும் எந்த பரிந்துரைக் கடிதங்களும் பரிசீலிக்கப்படாது என்பதால் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தற்போது தெற்கு ஆந்திரா நோக்கி நகர்வதால், ஆந்திர மாநிலத்தில் அக்டோபர் 17ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று முதலே திருமலை திருப்பதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏழுமலையான் கோயில் முன்பு கெண்டை கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி ஆறு போல் ஓடி கொண்டிருந்தது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மழை நிலவரம், தரிசனம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் எவ்வித பரிந்துரைக் கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. பக்தர்கள் அனைவரும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பிறகு அரபிக் கடலில் நகர்ந்து மீண்டும் வலுப்பெறும் என்பதால் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 75,361 பேர் தரிசனம் செய்தனர். 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடியாக இலவச தரிசனத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications