ராமேஸ்வரத்தில் அதிசயம்! உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவானது எப்படி? சுவாரஸ்யம்
ராமேஸ்வரம்: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவானது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கோயில் ஜாதக ரீதியில் பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இந்த உத்திரகோசமங்கையே உலகின் முதல் சிவன் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோயில் ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் என்ற மீனவ கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு பெயர் மங்களநாதர் கோயிலாகும். இங்கு மங்களநாதர் சன்னதியிலிருந்து சற்று தள்ளி தனி ஆலயத்தில் மரகத நடராஜர் காட்சி தருகிறார். இவர் சந்தன காப்பில் வீற்றிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறையான ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே சந்தன காப்பு கலைக்கப்பட்டு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது.
பச்சை நிறம்
அன்றைய தினம் பச்சை நிறத்தினாலான மரகத நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த மரகத நடராஜர் சிலை உருவானதற்கு ஒரு வரலாறும் கதையும் உண்டு. அதை தெரிந்து கொள்ளலாம். அதாவது மண்டபம் மீனவ கிராமத்தில் மரைக்காயர் என்ற மீனவர் வாழ்ந்து வந்தார்.
வறுமை
அவர் மிகவும் வறுமையில் இருந்தார். ஆனால் தனது கிராமத்தில் வீற்றிருந்த உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமியை மனமுறுகி பிரார்த்தனை செய்து வந்தார். இவர் மீனவர் என்பதால் தினந்தோறும் ராமேஸ்வரம் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை விற்பனை செய்வதன் மூலம் பிழைப்பை நடத்தி வந்தார்.
மீன்பிடிக்க சென்றார்
ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு மங்களநாதரை வழிபட்ட மரைக்காயர் கடலுக்குள் சென்றார். அப்போது ஆழ்கடலில் சென்ற போது திடீரென சூறாவளி காற்று வீசியது. அத்துடன் அதி கனமழையும் பெய்ய தொடங்கியது.
பாய்மர படகு
அவருடைய பாய்மர படகு நீரில் ஊஞ்சல் ஆடியது. திடீரென அவருடைய படகு நிலைக்குலைந்து சூறாவளி காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அவர் வழக்கமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்தை தாண்டி நீண்ட தூரத்தில் ஒரு பாசி படர்ந்திருந்த பாறையின் மீது மரைக்காயரின் படகு மோதியது.
அப்படியே துண்டான பாறைகள்
இந்த வேகத்தில் அந்த பாறை அப்படியே 3 துண்டுகளாக உடைந்து அவருடைய படகில் விழுந்துவிட்டது. உடனே லைட் ஸ்விட்ச் ஆப் செய்தது போல் சூறாவளி காற்றும் பேய் மழையும் கப்பென நின்றுவிட்டது. மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு மண்டபம் நோக்கி திரும்ப முயற்சித்தார்.
எந்த திசை
ஆனால் அவருக்கு எந்த திசையில் இருக்கிறோம் என்பது தெரியவில்லை. அந்த காலத்தில் அதற்கான வழிகாட்டு கருவிகள் எல்லாம் கிடையாது. இதனால் என்ன செய்வது என தவித்தார். அப்போது தான் தினந்தோறும் வணங்கும் மங்களநாதர் சுவாமியை வணங்கி நீண்ட நாட்கள் கழித்து எப்படியோ மண்டபம் பகுதிக்கு மரைக்காயர் வந்து சேர்ந்தார்.
மரைக்காயர்
கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் இன்னும் வரவில்லையே என மரைக்காயரின் உறவினர்கள் கவலையில் இருந்த போது மரைக்காயர் உயிருடன் வந்ததை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். பின்னர் மரைக்காயர் படகில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்த போது அதிலிருந்த அந்த பாசி படர்ந்த பாறைகளை பார்த்தார்.
பாசி படிந்த கற்கள்
பிறகு அந்த பாறைகளை என்ன செய்வது என தெரியாமல் வீட்டுக்கு படிக்கல்லாக போட்டு வைத்தார். வீட்டுக்குள் சென்று வருபவர்கள் அந்த பாறைக்கல் மீது நடந்து பாறை மேலிருந்த பாசிகள் விலகியது. பிறகு அந்த பாறையில் சூரிய வெளிச்சம் பட்டது. இதையடுத்து அந்த பாறைகள் எல்லாம் மின்னத் தொடங்கின.
மங்களநாதர் பரிசு
வீட்டிற்கு வெளியே செல்லும் போது பாறை மின்னுவதை மரைக்காயர் பார்த்தார். உடனே மங்களநாதர் தமக்கு அளித்த பரிசாக இருக்கும் என கருதினார். இதை அப்படியே அரசருக்கு கொடுத்தால் அவர் பார்த்து ஏதாவது பரிசு கொடுப்பார். அதன் மூலம் நம் வறுமை ஓரளவு குறையுமே என மரைக்காயர் நினைத்தார்.
பாண்டிய மன்னர்
நேராக பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்று அங்கு நடந்ததை எல்லாம் விளக்கிக் கூறினார். அதை பச்சை பாறை என்றே மரைக்காயர் தெரிவித்தார். இதையடுத்து மன்னரும் ஆட்களை அனுப்பி அந்த பாறைகளை கொண்டு வரச் சொன்னார். அந்த பாறையை சோதித்து பார்த்த போது அது மரகதக் கல் என தெரிந்தது. இந்த கல் எங்கு தேடினாலும் கிடைக்காது என நினைத்த மன்னர், மரைக்காயரிடம் பச்சைக் கற்களுக்கு உரிய பொற்காசுகளை கொடுத்தார்.
பச்சை கல்
மரைக்காயர் கொடுத்த பச்சை கல்லை வைத்துதான் பாண்டிய மன்னர் நடராஜர் சிலையை வடிக்க முடிவு செய்தார். இதற்காக இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதியை வரவழைக்க ஓலை அனுப்பினார்.
சிற்பி
சிற்பியும் நடராஜர் சிலை செய்ய வந்தார். பாண்டிய மன்னன் காட்டிய மரகத நடராஜர் சிலையை பார்த்துவிட்டு மயங்கி விழுந்த ரத்தினசபாபதி, தன்னால் செய்ய முடியாது என கூறிவிட்டு இலங்கைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு சென்ற பாண்டிய மன்னர், சிலையை வடிக்க முடியவில்லையே என கலங்கினார்.
சித்தர் குரல்
அப்போது "மன்னா கவலை பட வேண்டாம் , நான் சிலையை வடிக்கிறேன்" என்ற குரல் கேட்டது. உடனே திரும்பி பார்த்த போது அங்கு ஒரு சித்தர் இருந்தார். அவரிடம் போய் விசாரித்த போது அவர் சண்முக வடிவேலர் என அறிமுகம் செய்து கொண்டார்.
சிலை வடித்த சிற்பி
மரகத கற்களை அந்த சித்தரிடம் பாண்டிய மன்னர் ஒப்படைத்தார். சித்தரும் அந்த பாறையில் ஐந்தரை அடி உயரத்தில் மரகத நடராஜர் சிலையை செய்து முடித்தார். பின்னர் அது பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்படிதான் மரகத நடராஜர் சிலை வடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications