Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாபம் பெற்று தவளையான முனிவர்..விமோசனம் அளிக்க புறப்பட்ட கள்ளழகர்..வைகையில் இறங்கும் காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அழகர் மதுரைக்கு வரப்போகிறார் என்று நினைத்தாலே ஆனந்தம்தான். எதிர்சேவையில் தொடங்கி பூப்பல்லாக்கில் மீண்டும் அழகர்மலைக்கு கிளம்பும் வரைக்குமே ஊரெங்கும் வேடிக்கைகள் களைகட்டும். இப்ப சாமி எங்க இருக்கு என்ற கேள்வி எங்கும் கேட்கப்படும். அழகர் மலையில் இருந்து ஏன் கள்ளழகர் மதுரைக்கு வருகிறார் என்பது பற்றி ஒரு புராண கதையை அறிந்து கொள்வோம்.

அழகர் ஆற்றில் இறங்கும் கதை: சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' அதாதவளையாக போகக் கடவாய்! என சாபமிட்டார்.

Why Kallazhagar enter Vaigai on Chitra pournami Day? Purana Story

அந்த கணமே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சித்திரை திருவிழா: சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். கள்ளழகர் எதிர்சேவை: கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி , இடுப்பில் ஜமதாடு கத்தி என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.

அலங்காநல்லூர்: ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து ஆற்றில் இறங்குவதற்காக அலங்காரம் செய்வார்கள்.
அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள்.

சாபவிமோசனம்: அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனது.

எதிர்சேவை: அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டும். நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் நடக்கும்.

வைகையில் இறங்கும் கள்ளழகர்: ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் சிறப்பாக நடக்கிறது.

வழிநெடுக வரவேற்பு: ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.

முனிவருக்கு சாப விமோசனம்: ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றடைகிறார். இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது. தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.

பூப்பல்லாக்கு: தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளுவார். இது திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது. அந்த பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.

மதுரையில் கொண்டாட்டம்: எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+