Pradosham: சோம வார பிரதோஷம் உருவானது எப்படி? திங்களில் சிவனை வழிபடுவது எப்படி?
சென்னை: சோம வாரத்தில் வரும் பிரதோஷம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் பிரதோஷத்தின் போது எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சோமவார பிரதோஷம்..
நினைத்தது நிறைவேற.. கஷ்டங்கள் விலகிட.. சிவனை தரிசனம் செய்யுங்கள்..!!

பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.
சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதமிருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.
மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கோவிலிற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
சோமவார பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்தும், நந்திதேவருக்கு செவ்வரளியும், அருகம்புல் மாலையும் வழங்கி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
எலுமிச்சை சாதமோ, தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கினால் வாழ்க்கை வளமாகும்.
சோமவார விரத புராணக்கதை
சித்ரவர்மன் என்ற மன்னன் தன் மகள் சீமந்தினி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான். அந்த ஜோதிடர்களில் ஒருவர், உங்கள் மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பார் என்றார். ஆனால் இன்னொரு ஜோதிடர்! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள் என்றார். இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தார். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.
தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக்கவலையைக் கூறினாள். சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, சோமவார விரதத்தை கடைபிடித்தால் உன்னுடைய துன்பங்கள் விலகும் என்று கூறினார். சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைபிடித்தாள். சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது.
பின்பு ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைபிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது.
திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப் போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான். சோம வார விரதத்துக்கு இப்படியொரு மகிமை உண்டு என்கிறது புராணம்.
விரதமுறை
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி 11 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.
நந்தி தேவர் வழிபாடு
பிரதோஷ பூஜையில் நந்திக்குத் தான் முதல் அபிஷேகம் நடைபெறும். இத்தினத்தில் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும்.
கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது.
பிரதோஷ பூஜையில் நந்தி பகவானை வழிபட்டால் சகல தெய்வங்களையும் வழிபட்டதற்கு ஒப்பாகும்.
பிரதோஷ பலன்கள்
தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications