2023 பிளாஷ் பேக் நியூஸ்: பஞ்சாங்கம் கணிப்பும் தங்கம் விலை நிலவரமும்.. உச்சத்தை தொட்டது குறையாதோ?
சென்னை: இன்றைக்கு பஞ்சாங்கம் பார்த்துதான் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். அதே போல தங்கம் வாங்குவதற்கும் நல்ல நேரம் நாள் நட்சத்திரம் பார்த்து கடைக்கு செல்கின்றனர். 2023ஆம் ஆண்டு தங்கம் விலை நிலவரம் புதிய உச்சத்தை தொட்டது. 2024 ஆம் ஆண்டில் தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்திய மக்களின் மிகப்பெரிய முதலீடு தங்கம். நடுத்தர மக்களும், ஏழைகளும் குருவி சேர்ப்பது போல ஒவ்வொரு சவரனாக சேர்க்கின்றனர். பெண்களின் மிக முக்கியமான சேமிப்பே தங்கம்தான். மஞ்சள் உலோகத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளனர் தமிழக பெண்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் ஒரு சவரன் 22 ஆயிரம் ரூபாயை கடந்தது. ஆறு ஆண்டுகளில் ஒரு சவரன் 25000 ரூபாய் உயர்ந்து புதிய உச்சமாக 47 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு யாருமே எதிர்பார்க்காதது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2023ஆண்டு துவக்கத்தில் இருந்தே படிப்படியாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
கடந்த மே 5ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5775க்கு விற்கப்பட்டதே அதிகபட்ச விலையாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,870க்கும், சவரன் ரூ.46,960க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஊசலாட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது.
சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்கிறது. தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என்று நகை வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்ததே முக்கிய காரணமாக உள்ளது. மேலும், 3 மாதம் வரை தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்க காலத்துல எல்லாம் ஒரு பவுன் 50 ரூபாய் இருந்தது என்று பாட்டி சொல்வதை கேட்டிருப்போம். நம் பாட்டி காலத்தில் அதாவது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் 1942ஆம் ஆண்டு பத்து கிராம் தங்கம் 44 ரூபாய் ஆக இருந்தது. நம் அம்மா காலத்தில் 1967 ஆம் ஆண்டு பத்து கிராம் தங்கம் 102 ரூபாய்க்கு விற்பனையானது படிப்படியாக உயர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் தங்கம் ஆயிரம் ரூபாயை எட்டியது.
1996ஆம் ஆண்டு ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம் இரண்டாண்டுகளில் அதாவது 1998ஆம் ஆண்டு சடசடவென சரிந்து 4 ஆயிரம் ரூபாயை தொட்டது. ஆண்டுக்காண்டு தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு 2008ஆம் ஆண்டு 12,500 ரூபாயாக விற்பனையான தங்கம் 2023ஆம் ஆண்டு இப்போது 47 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
2023ஆம் ஆண்டு தங்கம் விலை சீராக இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய உச்சத்தை தொட்டது தங்கம். 2024ஆம் புத்தாண்டில் தங்கம் விலை எப்படியிருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. டிசம்பர் இறுதியில் இருந்து தங்கம் விலை சீராக உயரும் என்று பஞ்சாங்கத்திலும் கணித்துள்ளனர். தை மாதம் முதல் பங்குனி மாதம் முடிய அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய தங்கம் விலை நன்கு உயரும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications