சேவை குறைபாடு.. ஏர்டெல்லுக்கு ரூ.5 லட்சம் அபராதம்! வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் தர கோர்ட் உத்தரவு
டெல்லி: வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலித்த பின்னரும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இணைய மற்றும் லேண்ட்லைன் சேவையை கட் செய்ததற்காக டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சத்தை அபராதமாக விதித்திருக்கிறது.
டெல்லியை சேர்ந்தவர் ஜஸ்மீத் சிங் பூரி, இவர் கடந்த 2013ம் ஆண்டு ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை மற்றும் லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தி வந்திருக்கிறார். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இந்த சேவைக்கான கட்டணத்தை காசோலை மூலம் கட்டி வந்திருக்கிறார். இப்படி 2013ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான கட்டணத்தையும் காசோலை மூலம் செலுத்தியுள்ளார்.

ஆனாலும் அவருக்கான சேவைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்லாது, மார்ச் மாதத்திற்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்று ஏர்டெல் ஊழியர்கள் போன் மேல் போன் செய்து தொந்தரவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஜஸ்மீத், தான் காசோலை மூலம் கட்டணம் செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், அவர் கொடுத்த செக் 'பவுன்ஸ்' ஆகிவிட்டதாகவும், எனவே கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என்று போன் அழைப்புகள் வந்திருக்கின்றன.
இது குறித்து வங்கியில் விசாரித்தபோது, சில குளறுபடிகள் காரணமாக முதல் முறை செக் 'பவுன்ஸ்' ஆகிவிட்டதாகவும், ஆனால் பின்னர் வங்கி கணக்கிலிருந்து ஏர்டெல் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்டிலும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து ஏர்டெல் ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் ஏர்டெல் நிறுவனத்திலிருந்து சட்டப்பூர்வ நோட்டீஸ் ஜஸ்மீத்துக்கு வந்திருக்கிறது. அதில், 2013ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான கட்டணத்தையும் அதை உரிய நேரத்தில் செலுத்த தவறியதற்காக அபராதமாகவும் மொத்தமாக ரூ.7,549 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை பார்த்து ஷாக்கான ஜஸ்மீத், இதை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்துக்கொண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடுத்திருக்கிறார்.
வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இரு தரப்பு ஆதாரங்களையும் சரிபார்த்த நீதிமன்றம், ஜஸ்மீத் தரப்பில் நியாயம் இருப்பதை ஏற்று, சேவையை ஒழுங்காக வழங்கவில்லை என்று கூறி ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சத்தை அபராதமாக விதித்தது. இதில் ரூ.3 லட்சத்தை வாடிக்கையாளருக்கும், மீதமுள்ள ரூ.2 லட்சத்தை மாநில நுகர்வோர் நல நிதியத்துக்கும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ஏற்காத ஏர்டெல், மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில்,
"ஏர்டெல் நிறுவனம் சேவையை சரியாக வழங்கத் தவறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் நடவடிக்கை விநோதமானதாகவும், அபத்தமானதாகவும் இருக்கிறது. வாடிக்கையாளரின் கருத்துக்களுக்கு செவிகொடுக்க தவறிவிட்டது. எனவேதான் வாடிக்கையாளர் வழக்கு தொடுக்கும் நிலைக்கு ஆளானார். மாவட்ட ஆணையத்தின் தீர்ப்பில் நாங்கள் எந்த குறைபாடுகளையும் காணவில்லை. ஆகவே ரூ.5 லட்சம் அபராதத்தை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையை வழங்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு பாடமாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications