செல்போன் இல்லைனா கை பரபரங்குதா? இது அதுவேதான்.. உஷார்! உடனே மீண்டு வர 10 சிம்பிள் டிப்ஸ்!
சென்னை: உங்கள் போனில் சார்ஜ் 30%க்கு கீழே குறைந்துவிட்டால் பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறதா? சார்ஜ் போடும் நேரத்தில் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையா? நீங்கள் போன் அடிக்ஷனை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்.. இப்போதே எளிதாக இதில் இருந்து மீள்வது எப்படி? பத்தே பத்து சிம்பிளான டிப்ஸ் தான்.. ஃபாலோ பண்ணுங்க!
நம்மில் பலரும் அன்றாட தினசரி வாழ்வில் மிக அதிக நேரம் செல்போனை உபயோகிக்கிறோம். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறோம். அது நம் வேலை நேரத்தை தின்று விடுவதோடு, இந்தப் பழக்கம் தொடர்ந்து நாளடைவில் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
போன் இல்லையென்றால் கை கால்கள் நடுங்கும் அளவுக்கு பலரும் அதற்கு அடிக்ட் ஆகி விடுகின்றனர். போன் அடிக்ஷன் நமது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, தலைவலி, கண் பார்வை குறைபாடு, கை விரல்களில் வலி, மனச் சிக்கல் என பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. செல்போன் அடிக்ஷனில் இருந்து வெளியேற வேண்டுமா? இந்த 10 பாயிண்ட்ஸை கவனமாக பின்பற்றுங்கள்.
முதலில் ஒப்புக் கொள்ளுங்கள்: உங்கள் மொபைல் போனுக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்பதை முதலில் நீங்களே உணர்ந்துகொள்வது அவசியம். மொபைல் போன் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். மொபைல் போனுக்கு நாம் அடிமையாக இருப்பதை ஏற்றுக்கொள்வதே, அதில் இருந்து விடுபடுவதற்கான முதல் ஸ்டெப்.

கோல் செட் பண்ணுங்க: மொபைல் போனை பார்க்கும் நேரத்தைக் குறைத்தல், வேலையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் அல்லது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் தரும் வேறு வேலைகளில் ஈடுபடுதல் போன்ற தெளிவான இலக்குகளை நீங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது இலக்கு வைத்தால் தான் அதை நோக்கி நீங்கள் கவனம் செலுத்த எளிதாக இருக்கும்.
ஸ்கிரீன் டைமை கண்காணிங்க: ஒவ்வொரு நாளும் உங்கள் மொபைல் போனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் ஸ்மார்ட் போனிலேயே இருக்கும் ஸ்கிரீன் டைம் டிராக்கிங் வசதிகளை பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் போனில் எதை எதை எவ்வளவு நேரம் பார்க்கிறீர்கள் என்பது குறித்த விரிவான ரிப்போர்ட்டை வழங்கக்கூடிய ஆப் ஒன்றை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த ஆப்கள் நீங்கள் எதில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள், எதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலை உங்களுக்கு வழங்கும்.
எல்லைகளை ஃபிக்ஸ் பண்ணுங்க: உங்கள் மொபைல் போன் பயன்பாட்டிற்கான எல்லைகளை நீங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உணவு உண்ணும் போது, படுக்கைக்கு போவதற்கு முன்பு அல்லது வேறு வேலைகளில் இருக்கும்போது, யாருடனாவது நேரில் பேசும்போது போனை தொடவே கூடாது என்ற பவுண்டரியை ஃபிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
ஒரு வழக்கத்தை உருவாக்குங்கள்: ஃபோனை இவ்வளவு நேரம் தான் பயன்படுத்துவேன் என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஃபிக்ஸ் செய்து கொண்டு அதையே தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு இவ்வளவு நேரம், பொழுதுபோக்குக்கு இவ்வளவு நேரம், வாசிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கான நேரம் இது என தினசரி வழக்கத்தை உருவாக்குங்கள். தினசரி வழக்கத்தை ஃபிக்ஸ் செய்து, அதனை கடைபிடித்து வந்தால், உங்கள் போனை தேடும் பழக்கத்தை குறைத்து விடலாம்.
அந்த பெல் வேண்டாமே: நாம் போனை பார்க்கக்கூடாது என சும்மா இருந்தாலும், நோட்டிஃபிகேஷன்கள் விடாது. ஏதாவது ஒரு மெசேஜ் டோன் அல்லது, க்ளிங் என சத்தம் வந்தால் போனை எடுத்து பார்ப்பதோடு, அப்படியே மற்ற ஆப்களுக்கும் சென்று நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்போம். கவனச்சிதறல்களைக் குறைக்க, தேவையற்ற நோட்டிஃபிகேஷன்கள் அனைத்தையும் மொத்தமாக முடக்கிவிடுங்கள். நோட்டிஃபிகேஷன் வராமல் இருந்தாலே மொபைலை எடுத்து எடுத்துப் பார்க்கும் குறையும்.
மாற்று வழியை கண்டறியுங்கள்: எப்போதுமே ஃபோன் உபயோகித்துக் கொண்டிருக்கும் பழக்கத்தை மாற்றக்கூடிய ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடுகளைக் கண்டறிந்து கொள்ளுங்கள். அது ஆளுக்கு ஆள் மாறுபடும். உடற்பயிற்சி செய்வது, ஜிம்முக்கு போவது, இயற்கையை ரசிப்பது, புத்தகங்கள் படிப்பது, தியானம் செய்வது அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது போன்ற மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்தால் போனுடன் செலவிடும் நேரம் தானாகவே குறையும்.
டிஜிட்டல் டிடாக்ஸ் பயிற்சி: உங்கள் அன்றாட வேலைக்கு போன் அவசியமாக இருந்தால் வேலை நேரத்தில் போனை தவிர்க்க முடியாது. உங்கள் மொபைல் போனில் இருந்து முற்றிலும் உங்களைத் துண்டித்துக் கொள்ள, வீக் எண்ட் நாட்கள் அல்லது தினசரி மாலை - இரவு வேளைகள் என குறிப்பிட்ட காலங்களை போன் இல்லாமல் பயன்படுத்துவேன் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தை, ஓய்வெடுக்கவும், ஆஃப்லைன் செயல்பாடுகளில் ஈடுபடவும் பயன்படுத்துங்கள்.
சப்போர்ட் அவசியம்: உங்கள் இலக்குகள் மற்றும் முன்னேற்றத்தை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை வழங்கலாம். நீங்கள் கண்ட்ரோலாக இருக்கிறீர்கள் என்பதை கவனிக்க ஒரு ஆள் இருப்பதே உங்களுக்கு ஒரு மோட்டிவேஷனாக இருக்கும். நீங்கள் போன் அடிக்ஷனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கென இருக்கும் ஆதரவு குழுக்களில் சேரலாம்.
ஆப்ஸ் மற்றும் டூல்ஸை பயன்படுத்துங்கள்: நீங்கள் மொபைல் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் பல்வேறு ஆப்ஸ் மற்றும் டூல்ஸ் உள்ளன. இந்த ஆப்கள் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கும். குறிப்பிட்ட ஆப்ஸ் அல்லது இணையதளங்களை பயன்படுத்துவதை தடுக்கும். மேலும், அதிக நேரம் போனை யூஸ் செய்யும்போது போனை வைத்துவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் என ரிமைண்டர்களை காட்டும். இந்த 10 ஸ்டெப்ஸை ஃபாலோ செய்து போன் அடிக்ஷனில் இருந்து விரைவாக வெளியே வந்துவிடுங்கள்!












Click it and Unblock the Notifications