சந்திரயான் 3 வெற்றியை கொண்டாட.. ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்ட டெக்னோ! முன்பதிவு தொடங்கியது
சென்னை: சந்திரயான் 3 வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அறிவியல் உலகத்தை கடந்து டெக்னாலஜி உலகமும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. அதாவது சந்திரயான் 3 வெற்றியை சிறப்பிக்கும் வகையில் 'டெக்னோ' நிறுவனம் சந்திரயான் 3 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் உலகத்தையும் தாண்டி சாமானிய மக்களும் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டெக்னாலஜி உலகும் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் குதித்திருக்கிறது. அதாவது, 'டெக்னோ' நிறுவனம் சந்திரயான் 3 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்ப்ளோர் எடிஷன்' மொபைல் வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
விற்பனை 15ம் தேதி தொடங்கினாலும், அதற்கான முன்பதிவு தற்போதே நடைபெற்று வருகிறது. இதன் விலை ரூ.11,999. 16GB + 128GB RAM ஸ்டோரேஜ், ஆன்டிராய்டு 13, 6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, 50 MP கேமரா, 32 MP செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செல்ஃபி கேமிரா, 5,000 mAh பேட்டரி என பல்வேறு அம்சங்கள் இந்த மொபைலில் இருக்கின்றன. இதன் சிறப்பம்சமே இதன் பேட்டரிதான். அதாவது ஸ்டேன்ட் பை மோடில் இந்த மொபைல் 27 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications