"ரூ.16,901.." மளமளவென குறைந்த ஐபோன் மொபைல்கள் விலை.. உண்மையில் என்ன காரணம்! எவ்வளவு நாள் இருக்கும்
சென்னை: எப்போதுமே காஸ்ட்லியாக விற்பனை செய்யப்படும் ஐபோன்களுக்கு திடீரென மெகா சலுகை கிடைத்துள்ளது. மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா.. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மொபைல் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கூட புதுப்புது மொபைல்களை லான்ச் செய்து வருகிறது. இது மொபைலை வாங்க விரும்புவோருக்கு மிகப் பெரிய குழப்பத்தையே தருவதாக இருக்கிறது.

என்ன தான் இப்படி மாதம் ஒரு மொபைல் வந்தாலும் கூட ஆப்பிள் ஐபோனுக்கு இருக்கும் மவுசு என்றைக்கும் குறையாது. பல மணி நேரம் காத்திருந்து ஐபோன் வாங்கும் கூட்டும் இன்னுமே வெளிநாடுகளில் இருக்கவே செய்கிறார்கள்.
ஐபோன்: அப்படி ஐபோனுக்கு என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா.. நீங்கள் எத்தனை விலையுயர்ந்த ஆண்டிராய்டு மொபைல் வாங்கினாலும் கூட ஐபோன் அளவுக்கு உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது. பயனாளர்கள் டேட்டாவை ஆப்பிள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாக்கும். சாப்ட்வேர் சப்போர்ட்டும் பல ஆண்டுகளுக்குத் தருவார்கள். அதேபோல ஆண்டிராய்டு போல ஆண்டுக்கு ஒரு மொபைல் வாங்கத் தேவையில்லை. குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.
எல்லாவற்றையும் தாண்டி எந்த மொபைல் வாங்குவது என்பதில் குழப்பம் இருக்காது... ஆப்பிள் மொபைலில் மொத்தமே சில மாடல்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மிக எளிதாக எந்த மொபைல் வாங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அந்தளவுக்கு ஓராண்டிற்கு ஒரு விழாவை மட்டுமே வைத்து வெகு சில மொபைல் மாடல்களை மட்டுமே வெளியிடுவார்கள். இதன் காரணமாகவே ஐபோனுக்கு எப்போதும் மவுசு இருந்து கொண்டே இருக்கும்.
மெகா சலுகை: எப்போதும் காஸ்ட்லியாகவே இருக்கும் ஐபோனுக்கு இப்போது கலக்கல் ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஆப்பிளின் 5ஜி வசதி கொண்ட மொபைல் மாடலான ஐபோன் 14 சலுகை விலையில் கிடைக்கிறது. ஐபோன் 14 வெளியான பிறகு சில சமயங்களில் ஆப்பர்களில் அதன் விலை குறைந்திருந்தாலும் இந்தளவுக்கு அதன் விலை குறைந்ததே இல்லை. பிரபல ஆன்னைல் ஷாப்பிங் தளமான பிளிப்கார்டில் தான் இந்த திடீர் சலுகை வந்துள்ளது.

அதாவது ஐபோன் 14இன் சிவப்பு கலர் வேரியண்ட் ரூ.79,900க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே அதன் விலை இப்போது ரூ.66,999ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் நமக்கு 12901 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 16901 ரூபாய் நமக்கு டிஸ்கவுண்டாகவே கிடைக்கும்.
அதேபோல அதற்கு முந்தைய ஆண்டு மாடலான ஐபோன் 13 மொபைலும் இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 56,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஐபோன் 13 இரண்டு ஆண்டுகளாகச் சந்தையில் இருக்கும் நிலையில், அதன் குறைந்தபட்ச விலை இதுவாகும். அதிலும் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் நம்மால் வெறும் ரூ. 54,999க்கு இந்த மொபைலை வாங்க முடியும். மற்ற தளங்களிலும் ஆப்பர் விலையில் ஐபோன்கள் பழைய மாடல்கள் கிடைக்கிறது.
என்ன காரணம்: இப்போது எந்த பண்டிகையும் இல்லை. தீபாவளி கூட நவம்பர் மாதம் தான். அப்படியிருக்கும் போது எப்படி திடீரென ஐபோன் விலை இந்தளவுக்குக் குறைந்தது எனக் கேட்கிறீர்களா.. அதற்குக் காரணமும் ஆப்பிள் தான். ஆப்பிள் தனது அடுத்து மொபைலான ஐபோன் 15ஐ இன்று வெளியிடுகிறது. எப்போதும் புது ஐபோனை வெளியிடும் போது, ஆப்பிள் அதன் முந்தைய மாடல்கள் விலையைக் குறைக்கும். அதன்படியே இப்போதும் இதன் விலையைக் குறைத்துள்ளனர்.
இன்று பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஐபோன் 15 வெளியாகிறது. சிப், பேட்டரி, டிஸ்பிளே, கேமரா என்று அனைத்திலும் இது புதிய வெர்ஷனாக இருக்கும்.. இதன் ஆரம்ப மாடலின் விலை 80 ஆயிரம் முதல் 90 ஆயிரத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வாங்கலாமா.. இல்லை அதிரடி சலுகையில் கிடைக்கும் பழைய மாடல்களை வாங்கலாமா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications