பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினர் முன்னாள் குடியரசுத் தலைவர்? அவர் யார் தெரியுமா?
சென்னை: பாலிவுட் நடிகர் அமீர் கான், முன்னாள் குடியரசுத் தலைவருக்கு நெருங்கிய உறவினராமே, இது உங்களுக்கு தெரியுமா? எப்படி, என்ன வகையிலான உறவு என்பதை பார்க்கலாம். சுதந்திர போராட்ட வீரரும் உறவினர்தான் என்கிறார்கள். யார் அவர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடிகர் அமீர் கான் தன் மகள் வயதில் உள்ள தங்கல் நடிகை ஃபாத்திமாவை மணக்க இருப்பதாக முன்பு வதந்தி இருந்தது.

கொஞ்சம் அமீர் ஹிஸ்டரிக்குள்ள போவோம்.
உத்தரப் பிரதேசத்தில் ஹர்தோய் மாவட்டம், அக்தியார்புர் கிராமத்தில் தான் அமீர் கான் கொள்ளுத் தாத்தா ஹாஜி முகமது ஹுசைன் குடும்பத்தோடு வாழ்ந்தார். 25 ஏக்கர் தோட்டத்துக்கு சொந்தக்காரர். இவரது மகன் அமீர் தாத்தா ஜாஃபர் ஹுசைன் கான்.
ஜாபருக்கு மூன்று மகன்கள் நஸீர் ஹீசைன் கான், பக்கர் ஹுசைன் கான், தாஹிர் ஹுசைன் கான். நஸீர் கான் மும்பை ஓடி வந்து சினிமா கம்பெனிகளில் சேர்ந்து கதை எழுதத்தொடங்குகிறார். 1953ல் அனார்கலிக்கு கதை எழுதுகிறார். சில வருடம் கழித்து 'நஸீர் ஹுசைன் ஃபிலிம்ஸ்' கம்பெனி தொடங்கும் போது தன் தம்பி தாஹிர் ஹுசைனையும் அழைத்துக் கொள்கிறார்.
நஸீர் அயேஷா என்கிற பெண்ணை மணக்க இவர்களுக்கு மன்சூர் என்கிற மகனும், நூஸத் என்கிற மகளும் பிறக்கிறார்கள். நூஸத் அனில் பால் என்கிற பெங்கால் பையனை(சகோதரன் மன்சூரின் வகுப்புத் தோழன்) காதலித்து மணக்கிறார். இவர்களது மகன் தான் நடிகர் இம்ரான் கான். இம்ரான்கானின் காதலி தான் நம்ம ஊர் சென்னை நடிகை லேகா வாஷிங்டன் என்பது புதிய செய்தி.
ஆனா சில வருடங்களில் நூஸத்-அனில் விவாகரத்தாகின்றனர். பின் நூஸத் நடிகர் ராஜ் சுட்ஷியை மணக்கிறார். ராஜ் சுட்ஷியை லகான் படத்தில் இஸ்மாயிலாக பார்த்திருக்கிறோம்.
நஸீரின் சகோதரியை மணந்த அஸார் அலிக்கு பிறந்தவர் தாரிக்கான். தாரிக்கை 'யாதோன் கி பாரத்'தில் யாதான் கி பாரத் பாட்டு பாடும் மூன்றாவது மகனாக பார்த்திருக்கிறோம்.
நஸீரின் தம்பி தாஹிர் ஸீனத் என்கிற பெண்ணை மணக்கிறார். இவர்களுக்கு ஃபர்ஹத், நிக்கத் என்கிற மகள்களும், அமீர், ஃபைசல் என்கிற மகன்களும் பிறக்கிறார்கள். அண்ணனும், தம்பியும் சேர்ந்து 'யாதோன் கி பாரத், ஹம் கிஸிஸே கம் நஹின், கேரவான், ஆங்கன், தீஸ்ரி மன்ஸில்னு நிறைய ஹிட்டுகள் எடுக்கிறார்கள். அமீர் கானை 'கயாமத் ஸே கயாமத் தக்' படத்திலும் அறிமுகப்படுத்துகிறார்கள்.
அமீர் முதல் படத்துக்கு முன்னே அடுத்த வீட்டுப்பெண் ரீனாவுக்கு நூல் விடுகிறார். ஜன்னலில் தினம் காணக் காத்திருந்த அமீரை ரீனா மைண்ட் செய்யவேயில்லை. ரத்தக் கடிதம் எழுதிக் கூட பார்த்தார் அமீர். கடைசியில் ரீனா சம்மதிக்க திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு ஐரா என்கிற மகளும், ஜுனைத் என்கிற மகனும் பிறக்கிறார்கள்.
லகான் என்கிற படத்தை அமீர் தயாரிக்கும் போது அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிகிறார் கிரண் ராவ். கிரண் ராவின் கஸின் தான் சைக்கோ பட நடிகை அதிதி ராவ் ஹைதரி. கிரணின் அப்பா வழி தாத்தா தான் அதிதியின் அம்மா வழி தாத்தா ஜே.ராமேஷ்வர் ராவ். ஹைதராபாத் நிஜாமுக்கு கீழுள்ள வானபதி என்கிற தெலுங்கானாவில் உள்ள ஏரியாவுக்கு ராமேஷ்வர் தான் ராஜா.
லகான் பட சமயத்தில் அமீருக்கும், ரீனாவுக்கும் தகராறு முற்ற டைவர்சில் முடிகிறது. லகான் படம் மூலம் தோழியான கிரணிடம் பேசும் போது ஏதோ ஒன்றை உணர்ந்த அமீர், கிரணை லவ்வ காதல் தொடங்குகிறது. சில வருடங்களில் மணம் செய்து கொள்கிறார்கள். அமீரின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் ஒருவரின் மூலம் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.
கிரணுக்கு குழந்தை பிறக்காததால் இந்த முடிவு. பிறந்த ஆண் குழந்தைக்கு 'ஆசாத்' எனப் பெயரிடுகிறார்கள். காரணம் சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
அபுல் கலாம் ஆசாத் அமீரின் அம்மா வழி பாட்டிக்கு சகோதரர் முறை. இதனால் ஆசாத், அமீருக்கு நெருங்கிய உறவு. ஆசாத்தின் சகோதரி பேத்தி தான் பாஜக தலைவராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா. நஜ்மா அமீருக்கு கஸின்.
மேலும் அப்பா வழியில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாஹீர் ஹூசைனும் அமீருக்கு உறவினர் தான்.
அமீரின் பெரியப்பா நஸீர் ஹுசைன் மனைவி இருக்கும் போதே நடிகை ஆஷா பரேக்குடன் வாழ்ந்த வரலாறும் உண்டு. நஸீரின் மனைவி இளம் வயதில் இறந்தாலும் ஆஷா திருமணம் செய்யாமல் அவருடனே வாழ்ந்தார்.
அமீரோடு கிசுகிசுக்கப்பட்ட ஃபாத்திமா சனா ஷேக் கமலின் அவ்வை ஷண்முகி ஹிந்தி ரீமேக் சாச்சி 420ல் மகளாக நடித்தவர். வளர்ந்து தங்கலில் அமீர் மகளாக நடித்தார். 80களில் Qayamat se qayamat tak பார்க்கும் போது இத்தனை பெரிய கதைகளெல்லாம் வரும் என நினைக்கவில்லை. காலம் தான் எப்படி சுழல்கிறது. ஓட்டமான் ராஜ்ஜியத்தில் மெக்காவில் பிறந்த ஆசாத்தின் கடைசி உறவான ஆசாத்-ராவ் இருவரின் உறவுப் பாலம் தென்னிந்தியாவின் தெலுங்கானா வரை பரந்து விரிந்து கிடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications