ஜெயராம் வீட்டில் விசேஷம்.. அட, முதல் பத்திரிகையே இவருக்குதான்.. குஷியில் துள்ளும் நடிகர் காளிதாஸ்
சென்னை: நடிகர் ஜெயராம் வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன.. இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமணத்துக்கான அழைப்பிதழை தந்துள்ளார்கள் ஜெயராம் குடும்பத்தினர். இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம்... இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.. தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர்... பிறகு "மீன் குழம்பும் மண் பானையும்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழக மக்களின் ஆதரவை பெற்றார்.. சமீபத்தில் வெளியாகியிருந்த ராயன் படத்தில், காளிதாஸ் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
தடபுடல் ஏற்பாடுகள்: பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை, காளிதாஸ் காதலித்து வந்தார்... தன்னுடைய இந்த காதலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமூக வலைதளங்கள் மூலமும் வெளிப்படுத்தியிருந்தார்..
இதையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன், கடந்த வருடம் நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட திரையுலகினர் கலந்து கொண்டிருந்தனர்..
நீலகிரி தாரணி:காளிதாஸ் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் தாரணி, நீலகிரியை சேர்ந்தவர்.. விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றவர்.. பிரபலமான மாடல் அழகியாவார். மாடலாக மட்டும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்தும் பிரபலமானவர் தாரிணி. இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும், கடந்த 2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தற்போது, காளிதாஸ் ஜெயராம் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.. இதற்காக கல்யாண பத்திரிகை அச்சிடப்பட்டு, பிரபலங்களுக்கும், உறவினர்களுக்கும் ஜெயராம் குடும்பத்தினர் வழங்கி வருகிறார்கள். அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்.. இது தொடர்பான போட்டோவையும் காளிதாஸ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
வாழ்த்து: கடந்த 2021ம் ஆண்டு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயத்தில், நடிகர் ஜெயராம், காளிதாஸுடன் வந்து, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.. சினிமா டிஸ்கஷன் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மகனுடன் சென்னை வந்திருந்தார் ஜெயராம். அப்போது, முதல்வராக தேர்வாகியிருந்த ஸ்டாலினை சந்திக்காமல் சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து, மகனுடன் சேர்ந்து வந்து தனித்தனியாக சால்வை போர்த்தி, ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் தாரிணியுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு அதுவே இவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது... இவர்களின் போட்டோக்களும் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம், கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கையை வழங்காமல், தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கையை கொண்டு வந்து வழங்கியிருக்கிறார்.. இது தற்போது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications