19 வயது தான்.. "அதை” இப்போ நினைத்தாலும் கை, கால் நடுக்கம் வந்துவிடும்..நடிகர் மணிகண்டன் வருத்தம்
சென்னை: நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய 19 வயதில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வு குறித்து பேசி இருக்கிறார்.
இப்போது நினைத்தாலும் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தன்னுடைய கண் முன் வந்து தனக்கு கை, கால் நடுக்கம் வந்து விடுகிறது என்று மணிகண்டன் உருக்கமாக கூறியிருக்கிறார்.

அத்தோடு பல திரைப்படங்களில் நடித்த மணிகண்டனுக்கு சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் தான் பெறும் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிலையில் மணிகண்டனின் பேச்சு பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.
பொதுவாக யாருக்கு எப்போது வெற்றி கிடைக்கும் என்றும், யாருக்கு எப்போது தோல்வி கிடைத்து சறுக்கி விழுவார்கள் என்றும் சொல்ல முடியாது. நம்முடைய உழைப்பும் அதற்கான விடாமுயற்சியும் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சாதித்து காட்டியவர் தான் நடிகர் மணிகண்டன்.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அதற்காக பல முயற்சிகளை எடுத்த மணிகண்டன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையால் வெற்றியும் பெற்றிருந்தார். ஆனால் அப்போது கூட அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்ததில்லை. அதைத் தொடர்ந்து ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார்.
அதிலும் குறிப்பாக 8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, ஜெய்பீம், குட் நைட் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஜெய்பீம் மற்றும் குட் நைட் திரைப்படங்களால் தான் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் அதோடு திரைப்படங்களுக்கு வசனமும் திரைக்கதையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் மணிகண்டன் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசி இருந்தார். அந்தப் பேட்டியில் உங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள் அல்லது ஏதேனும் மறக்க முடியாத சம்பவம் நடந்திருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மணிகண்டன், அந்த நபர் யார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது 19 வயது தான் இருக்கும் அப்போது டெங்கு காய்ச்சல் வந்து குணமாகி இரண்டு நாள் தான் ஆகியிருந்தது.
அந்த நேரத்தில் ஒரு திரைப்படத்திற்காக ஆடிசனுக்கு நான் சென்றிருந்தேன். அப்போ அங்கிருந்த உதவி இயக்குனர் ஒருவர் டயலாக் பேப்பரை கொடுத்து என்னிடம் படித்துப் பார்த்துவிட்டு வந்து நடிக்க சொன்னார். அப்போது அங்கு வந்த இயக்குனர் அந்த உதவி இயக்குனர்களை திட்ட தொடங்கிவிட்டார். இந்த மூஞ்சிய இந்த கேரக்டருக்கு ஆடிசன் செய்கிறீர்களா? என்று கூறி அவர்களை மோசமாக திட்டினார்.
என்னையும் கூப்பிட்டு உனக்கெல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசையா? உங்க வீட்டில் இத பத்தி சொன்னியா? அவர்களும் உன்னை தடுக்கவில்லையா? என்று மிகவும் கேவலமாக பேசி அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார். எனக்கு இது முதல்முறையாக நடந்ததால் என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது வரை அந்த இடத்திற்கு சென்றால் எனக்கு வியர்த்து, கையெல்லாம் நடுங்கி விடும் என்று உருக்கமாக மணிகண்டன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications