நொந்துட்டாரு நெப்போலியன்.. எங்களை நோகடிக்காதீங்க, வாழவிடுங்க.. விமர்சித்தோரிடம் உருக்கமான கோரிக்கை
சென்னை: தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்த நெப்போலியன் தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்கப்போகிறார். இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டு, உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார் நெப்போலியன்.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர் நடிகர் நெப்போலியன்.. இவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.. இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி, அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்..

இப்போது தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பெண்ணை பார்த்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.
ஜப்பான்: தற்போது திருமணம் ஜப்பானில் நடக்க போகிறது.. அதற்காக குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன்.. ஆனால், தனுஷால் ஃபிளைட்டில் பயணம் செய்ய முடியாது.. அதனால், கல்யாணத்துக்கு கப்பலில் சென்றிருக்கிறார்... தனுஷூக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோதே, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன..
ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏன் சீரழிக்கறீங்க? பணம் இருந்தால், யாரையும் விலைக்கு வாங்குவீங்களா? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்தன. தனுஷால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என்று பயில்வான் ரங்கநாதன் போன்றோர்கள் ஓபனாகவே பேசினார்கள்..
தனுஷால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக்கலாமா என்று பலவிதமான பேச்சுக்கள் பரவின. குறிப்பாக டாக்டர் காந்தராஜ், இந்த நோய் உள்ளவர், 12 அல்ல 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். தனுஷ் 25 வயது வரை வாழ்ந்ததே பெரிய சாதனை என்றெல்லாம் பேசியிருந்தார்.
திருமணம்: ஓரிரு மாதங்கள் ஓய்ந்திருந்த இந்த விமர்சனங்கள், தற்போது தனுஷின் திருமணம் நெருங்கி வருவதால், மீண்டும் அதிகரிக்க துவங்கிவிட்டது.. இதுவரை எந்த விமர்சனங்களுக்குமே பதிலளிக்காத நெப்பேலியன், இப்போது உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருக்கிறார்.
அதில், உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஒரு பக்க சொல் ஒரு யானை பலம், எல்லோரையும் வாழ்த்துங்கள். மனதை நோகடிக்காதீர்கள், வாழ விடுங்கள் என நெப்போலியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எட்டு வருட கனவு: அந்த அறிக்கையில் உள்ளதாவது:"எனது அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே! எங்களது மூத்த மகன் தனுஷின் எட்டு வருட கனவு.. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம். இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறோம்.
தனுஷுக்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி. எங்களுக்கு இது அளவில்லா மன நிறைவு. சாதித்துவிட்டான். இந்த தருணத்தில் சில விஷயங்களை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், நமது பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். வாழ்ந்துதான் பார்ப்போமே.
மாற்றங்கள்: அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.. இந்த உலகட்த்துக்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை.. எதையும் கொண்டு போகப்போவதுமில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள். மற்றவர்களையும் அவர்களது மனம் போல் வாழ விடுங்கள். யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். பழிக்காதீர்கள்.
விமர்சிக்காதீர்கள்: உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். 'ஒரு பக்க சொல் ஒரு யானை பலம்'. எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள்.
நிஜ வாழ்க்கை: கோடான கோடி நன்றிகள்: இந்த உலகத்தை நீங்களும் வெல்லலாம். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை. வாழுங்கள்..! வாழ விடுங்கள்..!. நான் இங்கு போடுகிற ஒவ்வொரு பதிவும் எனது திரையுலகின் நடிப்பையும், நிஜ வாழ்க்கையை பார்த்து ரசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்காக மட்டும்தான். எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications