கண்ணீரை வரவழைக்கும் புகைப்படத்துடன் பதிவு.. ஐ லவ் அரவிந்த்.. நடிகை ஸ்ருதி சண்முகபிரியா உருக்கம்
சென்னை: கணவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அவரது கணவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை போட்டு ஸ்ருதி உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியலில் கோபியின் தங்கையாக நடித்திருந்தார். நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து கல்யாணப் பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. கோவையைச் சேர்ந்த ஸ்ருதி, அரவிந்த் சேகர் எனும் ஜிம் பயிற்சியாளரை திருமணம் செய்து கொண்டார். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் அரவிந்த் சேகர்.
இவர் மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை கடந்த ஆண்டு வென்றார். உடற்பயிற்சியில் அதிக அக்கறை கொண்ட இவர் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்துவிட்டார். நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. திருமணத்திற்கு பின் சீரியலை விட்டு விலகி தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.
அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். 30 வயதிலேயே அரவிந்த் சேகர் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது கணவர் இறந்தது குறித்து நிறைய வதந்திகள் வந்தன. அப்போது கணவர் இறந்த ஒரு சில நாட்களில் லைவில் ஸ்ருதி தோன்றினார். அவர் கூறுகையில் அரவிந்த் சேகர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இந்த துக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து வருகிறோம். ஆனால் சில யூடியூப் சேனல்கள் அவருடைய இறப்புக்கு எதை எதையோ காரணமாக யூகத்தின் பேரில் போட்டு வருகிறார்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கேளுங்கள். அதை விட்டுவிட்டு நீங்களாக ஒன்றை போடக் கூடாது. நீங்கள் போடும் போலி செய்திகளை பார்த்து என் வீட்டில் உள்ள வயதானவர்கள் மிகவும் மன வேதனையில் உள்ளார்கள். தயவு செய்து பொய் செய்திகளை பரப்பாதீர்கள் என வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தனது கணவர் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் (கணவர்) இல்லாமல் ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால் நான் எப்போதெல்லாம் உடைந்து அழுகிறேனோ அப்போதெல்லாம் உங்கள் ஆன்மா அன்பு காட்டுகிறது. நான் உங்கள் இருப்பை உணர்வது குறித்து யாராலும் விளக்க முடியாது. நான் மட்டும்தான் உணர முடியும். ஏனென்றால் நாம் இருவரும் கணவன் மனைவி. ஒரே ஆத்மா நமக்கு உள்ளது.

நீங்கள் என் பாதுகாவலராக என்றும் இருப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன். நீங்கள் என்னை விட்டு செல்ல மாட்டீர்கள். என் உயிர் மூச்சு வரை உங்களுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து கொண்டு எப்போதும் உங்கள் அன்புக்குரியவளாக இருப்பேன். லவ் யூ அரவிந்த்! எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. என்னை சுற்றி இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பதற்கு நான் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவள். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications