சத்யராஜால் தான் என் சினிமா வாழ்க்கை பாழானதா? உண்மையை உடைத்த விசித்ராவின் பழைய பதிவு.. இப்போ வைரல்
சென்னை: நடிகை விசித்ரா கவர்ச்சியாகவும் குணசித்திர வேடங்களிலும் படங்களில் நடித்து பிரபலம் அடைந்ததை விடவும் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்த விசித்திரா இப்போது மீண்டும் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விசித்ராவின் சினிமா வாழ்க்கை பாழானதற்கு காரணம் நடிகர் சத்யராஜ் தானா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்ட கமெண்ட்க்கு விசித்திரா விளக்கம் கொடுத்த பதிவு ஒன்று பல வருடம் கழித்து இப்போது வைரலாகி வருகிறது.

நடிகை விசித்ரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக கவுண்டமணி, செந்தில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பல படங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில வருடங்களாக எங்கே போனார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் விசித்திரா சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட கார்த்திகை தீபம் என்ற சீரியலில் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருந்தார்.
அதை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விசித்திரா கலந்து கொண்டிருந்தார். இதுவரைக்கும் இவர் மீது இருந்த பார்வை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாறி இருந்தது. அதை தொடர்ந்து இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வியக்க வைத்திருக்கிறார்.
இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றில் அதிகமான வயதுடைய போட்டியாளர்கள் தான் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்திரா இந்த சீசனில் அதிகமான வயது உடையவராக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிக நாட்கள் இருந்து வருகிறார். அதுபோல இந்த சீசன் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட அதற்கும் விசித்ரா தான் காரணமாக இருந்தார்.

அதாவது கதை சொல்லும் டாஸ்க்கில் எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுடைய மனதை காயப்படுத்திய கதையை சொல்லிக் கொண்டிருந்தபோது விசித்திரா சொன்ன கதை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதிலும் பல வெள்ளித்திரை பிரபலங்கள் கூட பதறிப் போக வைத்திருந்தது.
அதாவது விசித்ரா தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் அதுவும் அங்கு பிரபலமாக இருக்கும் ஒரு நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விதம் குறித்து வெளிப்படையாக விசித்திரா பேசி இருந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

அதோடு யார் அந்த நபர் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு விசித்ராவின் கணவர் அந்த தெலுங்கு நடிகர் பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் விசித்ரா பற்றி பல செய்திகளை ரசிகர்கள் தோண்டி எடுத்து வருகின்றனர். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விசித்திரா போட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

மண்டகசாயம் என்று ஒரு ஐடியில் இருந்து, "தமிழ்ல முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது விசித்திரா... ஆனா சத்யராஜ் மாமாவால அது போயிடுச்சு" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு ரிப்ளை செய்த விசித்திரா, "சத்யராஜ் சார் என் மேல மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்து இருந்தாரு.
அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரே மாதிரியான கேரக்டர் வந்ததால நல்ல கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாமல் போயிடுச்சு" என்று உருக்கமாக அதில் பதில் கொடுத்து சிபி சத்யராஜையும் டேக் செய்து இருக்கிறார். நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications