Bigg Boss : ரெட் கார்டை பார்த்து சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன்.. திவ்யா கேட்ட கேள்வி! மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, இந்த சீசனில் விளையாட்டைத் தாண்டி முழுக்க முழுக்க சர்ச்சை, அட்டூழியம், அலறல், அவமானம், அழுகை என ஒரே கலவர மேடையாக மாறிவிட்டது. இதற்கான சமீபத்திய உதாரணமாக இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோ ரசிகர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது. கார் டாஸ்க்கின் போது சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளிய விவகாரம் ஏற்கனவே பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், அந்த பஞ்சாயத்துக்கு முடிவு கட்டும் வகையில் விஜய் சேதுபதி இந்த முறை ரெட் கார்டை காட்டியுள்ளார்.
ரெட் கார்டு காட்டப்பட்ட நொடியிலேயே, இதுவரை "நான் தான் சரி" என்ற அகந்தையோடு நடந்துகொண்ட கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். முகத்தில் பயம், கண்களில் பதட்டம், வார்த்தைகள் வராமல் தடுமாறும் நிலை என இத்தனை நாளும் மாஸ் காட்டியவர்கள் ஒரு கார்டுக்கே இப்படியா என்ற கேள்வியை பார்வையாளர்களே எழுப்பும் அளவுக்கு அந்த காட்சி அமைந்தது.

இந்த சூழலில், வீட்டுக்குள் இருந்த திவ்யா கணேஷ் பொறுமையை இழந்து நேரடியாக கம்ருதீனை கேள்வி கேட்கிறார். "நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே... இவ கூட சேர்ந்து செய்றதால தான் உன் வாழ்க்கையே சீரழிய போகுதுன்னு. இத்தனை நாளா கனவு கண்ட வாழ்க்கை எல்லாம் இப்போ முடிஞ்சு போயிடுச்சு. நீ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு இப்போ உனக்கு புரியுதா இல்லையா?" என்று கோபத்துடன் பேச, அந்த நொடியிலேயே வீடு முழுக்க அமைதி நிலவியது.
ஆனால் அந்த நேரத்திலும் பார்வதி தன்னுடைய பழைய வழக்கத்தை மாற்றவில்லை. திவ்யாவிடம் "உன் வேலையை பார்த்துட்டு போ" என எகிறி பேச, அதற்கும் சளைக்காமல் திவ்யா பதிலடி கொடுத்து "இன்னும் நீ மாறல... இதுதான் பிரச்சனை" என்று சொல்லி விடுகிறார். இதனால் பார்வதியின் நடத்தை மீதான கோபம் மேலும் அதிகரிக்கிறது.
இதற்கிடையில் நிலைமை கைமீறுவதை உணர்ந்த கம்ருதீன், இதுவரை அவமானப்படுத்தப்பட்டு வந்த சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஏற்கனவே நடந்த தாக்குதல் காரணமாக மனதளவில் உடைந்து போயிருந்த சாண்ட்ரா, பயத்தில் அலறிவிடுகிறார். இந்த காட்சி பார்வையாளர்களிடையே "இது மன்னிப்பா, ரெட் கார்டு பயமா?" என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
அதன் பின்னர் பார்வதி, "நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கேன். எத்தனை வருஷம் ஆனாலும் இந்த வடு உனக்கு மாறாது. இப்போ தான் எனக்கு புரியுது" என கை கூப்பி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இந்த தாமதமான ஞானம் ரசிகர்களை பெரிதாக நெகிழ வைக்கவில்லை. நடந்த பிறகே வருந்துவது எந்த வகையில் நியாயம் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
மொத்தத்தில், இந்த சீசனில் பிக் பாஸ் வீடு ஒரு விளையாட்டு மேடையாக இல்லாமல், மனிதர்களின் உண்மை குணங்களை வெளிப்படுத்தும் மனநிலை சோதனை மையமாக மாறியுள்ளது. விளையாட்டை விளையாட தெரியாதவர்கள், வன்முறையை வியூகமாக நினைத்தவர்கள், அகந்தையையே தைரியமாக காட்டியவர்கள் அனைவருக்கும் விஜய் சேதுபதி காட்டிய ரெட் கார்டு தான் உண்மையான பாடமாக அமைந்துள்ளது. "இது கேம் ஷோ... களரி அல்ல" என்பதை இந்த ப்ரோமோ சொல்லாமல் சொல்லியிருக்கிறது.












Click it and Unblock the Notifications