நேற்று 'ஓட்டு' கேட்க குட்டீஸ் வேணும்! இன்று தியேட்டருக்கு வரக் கூடாதா! என்னப்பா உங்க ஜனநாயகம்(ன்)?
சென்னை: சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுமாறு தனது பெற்றோரை கேட்குமாறு குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்துவிட்டு இன்று ஏ சான்றிதழால் ஜனநாயகன் படத்தில் அவர்களுக்கு அனுமதி இல்லாதது குறித்து ப்ளூசட்டை மாறன் கிண்டல் பதிவு போட்டுள்ளார்.
இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது: அன்று: குட்டீஸ் எல்லாம் உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி எங்களுக்கு ஓட்டு போட வைங்க.

இன்று: இது A படம். குட்டீஸ் எல்லாம் 18 வயசு ஆனதுக்கு அப்பறம் பாருங்க. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் இது ஏ சான்றிதழ் படம் 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பெற்றோர் யாரும் அழைத்து வரவேண்டாம்.
18 வயது என்றால் அதற்கு ஏதேனும் வயது சான்றிதழ் அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டசபைத் தேர்தலை சந்தித்தது. அப்போது அந்த கட்சிக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதும் நடத்தப்பட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், கூட விஜய் பேசுகையில் தேர்தலில் புதியவர்களுக்கு வாக்களிக்குமாறு பெற்றோரிடம் சொல்லுமாறு மாணவர்களிடம் விஜய் தெரிவித்திருந்தார்.
அது போல் தேர்தல் நெருங்க நெருங்க, குட்டீஸ் எல்லாம் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு தங்கள் பெற்றோரிடம் சொல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனால் ஏராளமான குழந்தைகள் பெற்றோரிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க அடம் பிடிக்கத் தொடங்கினர். விஜய்யின் இந்த பேச்சால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் குற்றம்சாட்டியிருந்தது.
அது போல் முதல்வராக விஜய் பதவியேற்ற நாளில் கூட, குட்டீஸ்களுக்கு விஜய் மாமா நிறைய செய்வேன், எனக்காக உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி ஓட்டு போட வச்சதுக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 6 மாதங்கள் கழித்து இன்று இந்திய அளவில் 3000 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் குவிந்துள்ளனர்.
காலை முதலே விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து டிஜே இசைக் கச்சேரி வைத்து நடனமாடி மகிழ்ந்தனர். இந்த படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் நீக்கப்பட்ட நிலையிலும் ஒரு சில காட்சிகள் நீக்கப்படாததால் சென்சார், ஏ சான்றிதழ் வழங்கியது.
இதனால் இந்த படத்தை 18 வயதுக்கு கீழ் இருப்போர் பார்க்க அனுமதி இல்லை. தியேட்டருக்கு வந்தாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதே தான் கூலி திரைப்படத்திற்கும் நடந்தது. இந்த நிலையில் ஓட்டு போட குழந்தைகள் வேண்டும், படம் பார்க்க வேண்டாமா என ப்ளூசட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
