DNA OTT Review: டிஎன்ஏ படம் நல்லாதானே இருக்கு.. கண்ணை நகர்த்தவே முடியல.. ஓடிடியில் பார்த்த பிறகு உருகும் ரசிகாஸ்
சென்னை: சமீபத்தில் Hotstar OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது 'டிஎன்ஏ' (DNA) திரைப்படம். குழந்தை கடத்தல் சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர், வழக்கமான க்ரைம் கதைகளில் இருந்து விலகி, புதுமையான முறையில் வந்துள்ளதுதான் இதன் சிறப்பு.
படத்தின் ஆரம்பம் முதலே அதர்வா முரளி தனது கதாபாத்திரத்தில் அநாயசமாகப் பொருந்திப் போகிறார். ஒரு தந்தையாக, தன் குழந்தைக்காகப் போராடும் தீவிரத்தை அவர் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். அவரது ஒவ்வொரு செயலும், மனநிலை மாற்றங்களும் கதையின் ஓட்டத்துடன் இணைந்து, நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. தாயாக வரும் நிமிஷா சஜயன், எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் பக்கத்து வீட்டு பெண் போலவும் தோற்றமளிப்பதால், பார்வையாளர்களை ஈர்க்கிறார். அவர் வெளிப்படுத்தும் அமைதியான, அதே சமயம் தாக்கத்தை ஏற்படுத்தும் முகபாவனைகள் ரசிகர்கள் மனதை தொடுகின்றன.

நெல்சன் வெங்கடேசனின் நேர்த்தியான இயக்கம்
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், கதையில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்காமல், நேர்த்தியான முறையில் நகர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது. ஆரம்ப காட்சிகளை கிளைமேக்சில் பொருத்தியிருப்பது இயக்குநரின் டச். நரபலி காட்சிகள் பொன்னியின் செல்வன் சம்புவராயர் சதி ஆலோசனை காட்சி போல பரபரப்பாக இருளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அருமை. மருத்துவக் குற்றங்கள், சமூக பாதிப்புகள், குடும்பப் பாசம் என அனைத்தையும் எளிதாக அணுகக்கூடிய வகையில் அவர் சொல்லியிருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை, முக்கியமான தருணங்களில் உணர்வை அதிகரிப்பதுடன், பார்த்திபனின் ஒளிப்பதிவும், சாபு ஜோசப்பின் எடிட்டிங்கும் படத்திற்கு அமைதியையும், கச்சிதத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விமர்சனங்கள்!
'டிஎன்ஏ' ஓடிடி-யில் வெளியானதும், சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும் படம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. படத்தின் திரைக்கதை, நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு, பரபரப்பான இரண்டாம் பாதி, எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. "படம் ஒரு புதிய அனுபவம்", "சிறப்பான நடிப்பு", "குடும்பத்துடன் பார்க்க ஏற்றது" போன்ற கருத்துகள் பரவலாகக் காணப்படுகின்றன. கலர் சட்டை பெயர் கொண்டவர் உட்பட சில யூட்யூப் விமர்சகர்கள் இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்ததை ரசிகர்கள் சுட்டிக்காட்டி, ஏன் அப்படி விமர்சித்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது. படம் கண்ணை நகர்த்தவே விடவில்லையே எனக் கூறுகிறார்கள். ஒரு பாடலும், 2 சண்டை காட்சிகளையும் தவிர்க்க வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அவை கமர்சியலுக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றபடி அனைத்து காட்சிகளுமே அவசியமாக உள்ளன என்பது ரசிகர்கள் கருத்து.
சமூக அக்கறையுடன் கூடிய திரைக்கதை!
பெண் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெற்றோரின் பாசம், சமகால சமூகச் சூழல் எனப் பல முக்கிய விஷயங்களையும் 'டிஎன்ஏ' தொட்டுச் செல்கிறது. படத்தில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகள், வலுவான வசனங்கள் ஆகியவை படம் முழுக்க சுவாரஸ்யத்துடன் நகர்வதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், 'டிஎன்ஏ' திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை அளிக்கிறது. நடிகர்களின் இயல்பான நடிப்பு, சிக்கலற்ற இயக்கம், அர்த்தமுள்ள திரைக்கதை, சிறந்த இசை ஆகியவை இந்தப் படத்தை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்க ஏற்ற ஒரு அசத்தல் க்ரைம் த்ரில்லர் என்பதே பலரது ஏகோபித்த கருத்தாகும்.












Click it and Unblock the Notifications