மண் வாசனை மலைச்சாமி முதல் மாப்பிள்ளை பக்கிரிசாமி வரை! இந்த நடிகரை தேடும் மலையாள சினிமா! யார் இவர்?
சென்னை: வினு சக்கரவர்த்தி ஆரம்பத்தில் நடிக்க வந்தது முதல் கடைசி படத்தில் அவர் நடித்தது வரை ஒரே மாதிரியாகவே இருந்தது ஆச்சரியம்தான். அவர் நடித்த படத்தில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது என்பதை சொல்லுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று ஒரு படம். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஒரு தமிழ்நாட்டு உள் கிராமத்தில் நடக்கும் கதை. அப்பாவி ஹீரோ செம்பட்டைக்கு உறுதுணையாக ஒரு பெரிய மனிதர் இருப்பார். செம்பட்டையை திருமணத்துக்கு வாழ்த்தி பரிசு தரும் அந்த பெரிய மனிதர் செம்பட்டை 'உச்சி வகுந்தெடுத்து' எனப் பாடும் போது கரைந்து விடுவார். அந்த அற்புத மனிதராக தான் நுழைந்தார் சக்ரவர்த்தி. நம்ம வினுச்சக்ரவர்த்தி.

மனிதர் பொய் முகமில்லாமல் நடிப்பவர். கிராமத்து மனிதரின் பேச்சு அவர் மாடுலேஷனில் விளையாடும். அந்த வினு சிவக்குமாரின் வண்டிச்சக்கரம் படத்தில் 'அண்ணத்த...அண்ணத்த' என சிவக்குமாருக்காகவே வாழ்பவர். அந்தப் படத்தின் கதையும் அவருடையதே.
சினிமா ஆசையால் தன் போலீஸ், ரயில்வே வேலைகளை துறந்து கன்னட இயக்குனர் புட்டண்ணாவிடம் சேர்ந்த வினுவின் தேவை கன்னட ரீமேக்கான ரோசாப்பூ ரவிக்கைகாரியில் தேவைப்பட்டதால் நுழைந்தார்.
வினுவை மணிவண்ணன் தன் படங்களில் அழகாக காட்டுவார். கோபுரங்கள் சாய்வதில்லையில் வினுவின் கிராமத்து அப்பாவின் வெள்ளந்தி மனம் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒன்று. 'இங்கேயும் ஒரு கங்கை' படத்தில் தாராவின் அப்பாவாக வரும் வினு மாட்டை விற்று விட்டு தண்ணி அடிப்பார். தன் இரண்டு குண்டு பசங்களுக்கும் பிரியாணி வாங்கி வந்து "பசங்க இளைச்சிட்டாங்க"ன்னு வருந்தும் அந்த அழகு. வினு என்கிற மனிதரின் இயல்பான நடிப்பு.
கோவில்புறா என்கிற படத்துக்கு கதை எழுதிய வினு அதில் நாயகன் பி.யூ.சின்னப்பாவின் மகன் ராஜாபகதூருக்கு அப்பாவாக நடித்திருப்பார். நாதஸ்வரக் கலைஞனாக வரும் அவர் சில்க் ஸ்மிதாவின் மேல் உள்ள மோகத்தால் பெயர், புகழ் இழந்து நாதஸ்வரத்தை வாசித்தே உயிரை விடுவார். அழகிய பாடல்கள் இருந்தும் சங்கர்-சரிதா நடித்தும் 'கோவில் புறா' தோல்வி அடைந்ததால் வினுச்சக்ரவர்த்தியின் கதை கோடம்பாக்கத்தில் பின் எடுபடவில்லை.
கேரக்டர் பாத்திரம் மட்டுமல்லாது வில்லன் ரோல்களில் ஸ்கோர் செய்வதில் மன்னன் அவர். மண்வாசனை படத்தில் மலைச்சாமி தேவராக அவரின் வில்லத்தனம் ரசிகர்களை எரிச்சலூட்டியது நிஜம். 'காவல்' என்கிற படம் ஹிந்தியில் கோவிந்த் நிஹலானியின் இயக்கத்தில் வந்த 'அர்த் சத்யா' படத்தின் ரீமேக். சிறந்த போலீஸ் படங்களில் ஒன்றான அர்த்சத்யாவில் காவல்துறை அதிகாரியாக ஓம்புரி வெளுத்து வாங்கி இருப்பார். அவருக்கு ஏற்ற வில்லானாக சதாசிவ அம்ரபுர்கரை அறிமுகப்படுத்தினார்கள்.
தமிழில் காவல் என எடுத்த போது நாயகன் தியாகராஜன் நடிக்க வில்லனாக 'ராஜாபாதர் புல்லட்டு' என்கிற ரோலில் வினு மிரட்டி இருப்பார். வினுவின் ராசிப்படி அந்தப்படம் ஓடவில்லை. ஆனால் கமலோடு நடித்த தூங்காதே தம்பி தூங்காதே அவருக்கு பெயரை வாங்கி தந்தது.
ரஜினியோடு தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இணைந்த வினு பல ரஜினி படங்களில் நடித்தார். பின் காமெடியிலும் இறங்கி சிரிக்க வைத்தார். 'மேலேபரம்பில் ஆண்வீடு' என்கிற படத்தில் ஷோபனாவின் தந்தை வீரமுத்துக்கவுண்டராக நடித்து கேரளாவில் இண்டு இடுக்கிலெல்லாம் புகழ்பெற்றார் வினுச்சக்ரவர்த்தி.
இதில் வேறொரு அழகான சம்பவம் என்னவென்றால் இந்த மலையாளப் படத்தில் வீரமுத்து கவுண்டர் என்கிற தமிழனாக நடித்த வினு இதன் தமிழ் ரீமேக் படத்தில் நாயகியின் தந்தையாக மலையாளி மேனன் பாத்திரத்திலும் நடித்தார். பின் முருகராஜ கவுண்டர், ராஜமாணிக்யன் நாடார், ஆண்டிப்பட்டி தேவர் என பல மலையாளப் படங்களில் வில்லனாக வந்தார் வினு.
அண்ணாமலை எம்.எல்.ஏ, குருசிஷ்யன் போலீஸ், மாப்பிள்ளை பக்கிரிசாமி, வாழ்க்கை சக்கரம் சதாசிவ கவுண்டர், நாட்டாமை மீனாவின் அப்பா, எங்கஊரு பாட்டுக்காரன் ராமராஜனின் அப்பா, ராஜாதிராஜா நல்லமுத்து கவுண்டர், நினைத்தேன் வந்தாய் சந்தன கவுண்டன் என அவர் ஏற்ற கதாபாத்திரங்களில் சில நம் மனதில் என்றும் நிற்பவை.
தோன்றிய முதல் படத்தில் இருந்த தோற்றம் போலவே கடைசிப் படத்திலும் இருந்தது வினுச்சக்ரவர்த்தியின் தனி ஸ்பெஷல். கிராமத்து பாத்திரங்களில் அவர் காட்டிய வெள்ளந்தி, கோபம், வஞ்சம், துக்கம் எல்லாம் அழகாக பார்வையாளனை கடந்தது நிஜம். அத்தனைப் பெரிய உருவத்திலும், பெரிய மீசைக்குப் பின்னாலும் அவரிடம் அனைவரும் விரும்பும் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அது அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒன்று.
வினுச்சக்ரவர்த்தி என்கிற மகாநடிகர் ஆயிரம் படங்களுக்கு மேல் இந்த மண்ணில் நடித்து விட்டுப்போயிருக்கிறார். தான் பயின்ற கன்னடப் படத்தில் மட்டும் அவர் நடிக்கவேயில்லை.
அவர் இடம் இன்றும் காலியாகவே இருக்கிறது. அவர் ஏற்று நடித்த கவுண்டர் பாத்திரத்துக்கான நடிகரை கேரளத் திரையுலகம் வெற்றிடமாகத்தான் வைத்திருக்கிறது. மறக்கமுடியாத நடிகர் வினுச்சக்ரவர்த்தி என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications