தென்னங்குருத்து பொரியல், நாகர்கோவில் அவியல் வரை! பிக்பாஸில் கமல் விருந்து! வாவ் மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பொங்கலை முன்னிட்டு கமல்ஹாசன் 43 வகையான உணவுகளுடன் விருந்து வைத்துள்ளார். அதுவும் மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையிலான குழுவினர் சமைத்த உணவு!
கோவை மாவட்டம், மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் எனும் படத்தில் காதல் நாயகனாக நடித்திருப்பார். கோடி அருவி கொட்டுதே என்ற பாடல் மூலம் பிரபலமானவர். கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் நடித்துள்ளார், கேசினோ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது சமையல் கலையில் சிறந்து விளங்குகிறார். தனது தந்தையுடன் சிறு வயது முதலே சமையல் வேலைக்கு போய் அவரது தந்தை பட்ட சில அவமானங்கள் இவரது மனதை காயப்படுத்தியதாகவும் அதனால் சமையல் தொழிலில் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சமையல் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தாராம்.
அந்த வகையில் கோவையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காலை, மதியம் என இரு வேளைகளுக்கு உணவு சமைத்து கொடுக்கிறார். இவர் சமையல் செய்வதே சிறுவாணி ஆற்று தண்ணீரில்தானாம். இவருக்கு கீழ் 2000 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் அனிமேஷன் மற்றும் சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால் சமையல் பக்கம் வந்துவிட்டார்.
இவர் பெங்களூரில் ஹோட்டல் நடத்தினார். பிறகு, மாதம்பட்டிக்கே திரும்பி போய் கல்யாண நிகழ்ச்சிகளுக்கு உணவு ஆர்டர் எடுத்து செய்யத் தொடங்கினார். இவரது உணவில் தரம் இருந்ததால் இவர் சினிமா ஷூட்டிங்கிற்கும் சமைத்து கொடுத்தார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி, இயக்குநர் ராஜமௌலி வீட்டு திருமணம், விக்ரம் சக்ஸஸ் மீட் போன்றவைகளுக்கு அறுசுவை உணவை படைத்துள்ளார்.
வெளிநாடுகளுக்கும் உணவு சேவையை வழங்குகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என யார் வீட்டில் விசேஷங்கள் என்றாலும் கூப்பிடுங்கள் மாதம்பட்டி ரங்கராஜை என்கிறார்களாம். அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கமல்ஹாசன் விருந்து அளிக்க முடிவு செய்தாராம்.
ஏற்கெனவே விக்ரம் பட வெற்றி விழாவில் மாதம்பட்டியாரின் கைப்பக்குவத்தை அறிந்த கமல், இந்த பிக்பாஸ் விருந்துக்கும் அவரையே அழைத்துவிட்டாராம். இந்த விருந்தில் 43 வகையான உணவுகள் பறிமாறப்பட்டன. இதில் பெரி பெரி சிக்கன், மட்டன் சுக்கா, வறுக்கப்பட்ட மீன், இறால் தொக்கு, பட்டர் புல்கா, கடாய் சிக்கன் கிரேவி, பிண்டி நிலக்கடலை பொறியல், வெஜ் சிக்கன் டிக்கா, கீரனூர் மட்டன் தம் பிரியாணி, காளான் தம் பிரியாணி ரைதா, வேக வைத்த சாதம், மட்டன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு, நாட்டுக்கோழி, ரசம், கெட்டியான தயிர், ஊறுகாய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும் தென்னங்குருத்து பொரியல், நாகர்கோவில் அவியல், புதினா சாஸ், வெஜ் ஆம்லேட், பட்டர் புல்கா, கடாய் காளான் கிரேவி, பட்டர் பீன்ஸ் தம் பிரியாணி, ரைதா, வேக வைத்த சாதம், சின்ன வெங்காயம் முருங்கை சாம்பார், வெஜ் மீன் குழம்பு, பூசணி மோர் குழம்பு, மிளகு ரசம், வாழைப்பூ வடை, பாதாம் பிர்ணி பாயாசம், விருபாக்ஷி வாழைப்பழம், பன்னீர் ரோஸ் டிரை ப்ரூட் அல்வா, லிட்சி சாண்ட்விச் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications