Good Bad Ugly Review: மார்க் ஆண்டனி டெம்ப்ளேட்+அஜித்தின் மாஸ் ஒரு பிளேட்! குட் பேட் அக்லி விமர்சனம்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தல அஜித்.. ஸாரி.. ஸாரி.. அஜித் குமார் (ஏகே), திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மாஸ் மற்றும் தமாஷ் ஆகியவற்றை கலந்து எடுத்த இந்த படம் எப்படி இருக்கிறது. இதோ விமர்சனம் (Good Bad Ugly Review).
டானுக்கெல்லாம் டான், டன்டனக்கா டான் என்று போவோர் வருவோர், பீச்சில் பொரி கடலை விற்போர் வரை பில்ட்அப் கொடுத்து ஹைப் ஏற்றும் கதாப்பாத்திரம் அஜித்துக்கு. அவரின் மனைவியாக திரிஷா. லியோ மாதிரியே இதிலும் தோளுக்கு மேலே வளர்ந்த பையனுக்கு அம்மா.

தனது கணவர் அஜித்தின் எதிரிகளால் தனது வாரிசுக்கு ஆபத்து வந்துவிடும் என்று ஒதுங்கி வாழ்கிறார் ஹீரோயின். வெயிட்.. திடீரென விஸ்வாசம் ரிவ்யூவை மாத்தி பேஸ்ட் செய்துவிட்டோம்னுதானே நினைச்சீங்க. சத்தியமா இல்லை. நிஜமாகவே குட் பேட் அக்லியிலும் அதுதான் கதை. அதில் நயன்தாரா, இதில் திரிஷா. அதில் மகளை காப்பாற்றிய அஜித் இதில் மகனை காப்பாற்றுகிறார். ஏற்கனவே தங்கச்சியை, வேதாளம் படத்தில் காப்பாற்றிவிட்டதால், தங்கச்சி கேரக்டர் தொல்லை இதில் இல்லை.
லியோ வாடை அடிக்குதே
வில்லன்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றும் ஸ்டோரி லைன் மற்றும் கதை நடக்கும் ஸ்பெயினின் நிலவியல் அமைப்பு அப்பப்போ லியோ வாடையை தியேட்டரில் வீசிச் சென்றதையும் இப்போ சொல்லியே ஆகனும் பாஸ். அதற்காக லியோ மாதிரி சீரியஸ் படம் என நினைத்துவிடாதீர்கள். முதல் அரை மணி நேர பில்ட்அப், அஜித்தின் அட்வைஸ் மழை, கதை பின்னணிக்கு பிறகுதான், தலைவர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வித்தையை ஆரம்பிக்கிறார்.
ஆரம்பித்த ஆதிக்
இதுவரை சீரியஸ் படங்களின் சாயல்தானே தெரிந்தது, நான் எடுத்த மார்க் ஆண்டனியை அஜித்தை வைத்து பார்ட் டூ எப்படி எடுத்துக் காட்டுகிறேன் பாரு என்று ஜலங்கை கட்டி ஆடத் தொடங்கிவிட்டார் ஆதிக். அதன்பிறகுதான் படம் டாப் கியரில் பயணிக்க தொடங்குகிறது. வில்லன் கேரக்டரை பார்த்தால் கூட கோபம் வராத கதையம்சம், அப்பப்போ 90ஸ்சில் வெளியான ஹிட் பாடல்களை ஓட விடுவது, மியூசிக்கை ஹைப்பிலேயே வைத்திருந்து அப்பப்போ காமெடி செய்வது என மார்க் ஆண்டனியின் அதே டெம்ப்ளேட்.
விஷாலுக்கு பக்க துணையாக வந்த சுனிலை இதிலும் அஜித்துக்கு வலதுகரமாக போட்டீங்க ஓகே, சில்க், எஸ்ஏ சூர்யா போகும் அதே பஸ்சை இதிலுமா யூஸ் பண்ணுவீங்க. தியேட்டருக்குள் ஒரே தேஜாவூதான் போங்க.
மாஸ் லுக்கில் அஜித்
மார்க் ஆண்டனி 2 மாதிரி போகும் படத்திற்கு நடுவே இது அஜித் படம் என நினைவூட்டுவதற்காக அப்பப்போ அவரை கூலிங் கிளாஸ் போட்டு, நடக்க விட்டுள்ளார்கள். அஜித் படத்துக்காக நடந்ததை பரங்கிமலையில் இருந்து நடக்க தொடங்கியிருந்தால், இமயமலையையே தாண்டிவிட வாய்ப்புண்டு.
சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்ப கும்ப கும்பகோணம்.. என பஸ் நடத்துநர்கள் கூவி கூவி அழைப்பதை போல படம் நெடுக, ஏதாவது ஒரு கேரக்டர் வந்து, அமர்க்களம், அட்டகாசம், வாலி, வரலாறு, வரலாறு என்று அஜித் படங்களின் பெயர்களை வரிசையாக ஒப்பித்துச் செல்கிறது. எப்பவாவதுன்னா ஓகே.. அதுக்காக எப்பவுமாப்பா. இப்படித்தான் இது பார்ட் டூ படம் இல்லை என்று நிரூபித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
படம் எப்படி இருக்கிறது?
இளமை இதோ இதோ பாடலின்போது நடக்கும் சண்டை காட்சி, அஜித் போட்டோவை பார்த்ததும் கேங்ஸ்ட்டர்கள் வாட்ஸ்அப் குரூப்பை டெலிட் செய்துவிட்டு ஓடுவது என்று, அப்பப்போ கூஸ்பம்ப் காட்சிகளை அலங்கரித்துள்ள ஆதிக், தனது டிரேட் மார்க் அம்சங்களான, வில்லனை பார்த்து கூட கோபம் வராத கதாப்பாத்திரங்கள், எத்தனை முறை சுட்டாலும் எதுவும் ஆகாத சாகாவரம் பெற்ற ஹீரோ மற்றும் சுற்றத்தார், டார்க் காமெடி, சிம்ரன் போன்ற வின்டேஜ் டாப் ஸ்டார்களை உள்ளே கொண்டுவந்தது ஆகியவற்றை தவறாமல் செய்துள்ளார்.
மார்க் ஆண்டனியாக இருக்கட்டும், சமீபத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்து வெளி வந்த சங்கராந்தி வஸ்துன்னம் படமாகட்டும், படத்தில் என்னதான் மாஸ் சீன்கள் இருந்தாலும் காமெடிதான் பிரதானமாக இருந்திருக்கும். மாஸ் சீனையும் தமாஷாக்கியிருப்பார்கள். அதுதான் சக்சஸ் பார்முலாவாக மாறியுள்ளது. அதையே குட் பேட் அக்லியும் செய்துள்ளது.
மோட்டு பத்லு போல கதாப்பாத்திரங்கள் அனைத்தையுமே காமெடியாக்குவதுதான் இன்னைக்கு ட்ரெண்ட். அதில் பாஸ் செய்துள்ளது இந்த படம். ஜாலியாக படம் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு ட்ரீட் என்றால் என்றால், அஜித் ரசிகராகவும் நீங்கள் இருந்துவிட்டால் உங்களுக்கு டபுள் ட்ரீட்தான்.












Click it and Unblock the Notifications