நட்சத்திரங்கள் சென்னையில் குவிந்தன. பிரபல நடிகர் காளி வெங்கட் வீட்டில் சோகம்.. வெங்கட்டுக்கு ஆறுதல்
சென்னை: முண்டாசுபட்டி, இரும்புத்திரை, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து, மக்களின் கவனத்தை பெற்ற நடிகர் காளி வெங்கட்டின் வீட்டில் சோகம் நடந்துள்ளது. இவரது தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர் வெங்கட். சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காமல், வியாபாரம் செய்து வந்தார்.. அப்போதுதான், இயக்குனர் விஜய் பிரபாகரனின் அறிமுகம் வெங்கட்டுக்கு கிடைத்துள்ளது..

முதல் அறிமுகம்: "தசையினை தீ சுடினும்" என்கிற படத்தில், 2010-ல் விஜய் பிரபாகரனுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். காளி என்ற கேரக்டரில் முதல்முதலாக அந்த படத்தில் அறிமுகமானார் வெங்கட்.., அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.. ஆனாலும் தான் நடித்த முதல் படத்தின் கேரக்டர் காளி என்ற பெயரை, தன்னுடைய பெயருடன் இணைத்து கொண்டார்.
கலைஞர் டிவி நடத்திய "நாளைய இயக்குனர்" என்கிற நிகழ்ச்சியில், பல்வேறு டைரக்டர்களின் படங்களில் நடித்தார்.. அந்தவகையில்தான், ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற குறும்படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு கவனம் பெற்றது.. பிறகுதான், முண்டாசுப்பட்டி படமாக வெளியானதிலும், வெங்கட் நடித்திருந்தார். இந்த படம்தான் ரசிகர்களுக்கு அவரை அடையாளம் காட்டியது.
கார்கி படம்: பிறகு கார்கி படத்தில் அவரது நடிப்பு பலராலும் கவனம் பெற்றிருந்தது. அதேபோல, இறுதிச்சுற்று, தெகிடி படத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து மௌனகுரு, தடையற தாக்க, கலகலப்பு, உதயம் என்எச்40, மதயானை கூட்டம், வாயை மூடி பேசவும், மிருதன் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தார் காளி வெங்கட்.. இவர் ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் போலீஸ் நண்பராக நடித்து, கோடம்பாக்கத்தின் கவனத்தை தன் மீது திருப்பினார்.
அந்தவகையில், தமிழ் காமெடி மற்றும் கேரக்டர் நடிகர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார் காளி வெங்கட்.. இப்போதுகூட பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தியிலும் வெங்கட் அறிமுகமாகியுள்ளார்.
ஆறுதல்: இந்நிலையில், இவருடைய தாயார் விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 72 . இன்று இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடந்துள்ளது.. விஜயலட்சுமி அம்மாள் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயின் மறைவால் சோகத்தில் மூழ்கி உள்ள நடிகர் காளி வெங்கட்டுக்கு, நண்பர்களும், உற்றார் உறவினர்களும் தங்கள் ஆறுதலை சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications