புதிய வார்ப்புகளில் அப்பா ரோலுக்கு வந்த ஜி.சீனிவாசன்! மாற்றி யோசித்த மனோபாலா! ரதி சீனில் அபாரம்
சென்னை: புதிய வார்ப்புகள் படத்தில் ரதி அக்னிஹோத்ரிக்கு அப்பாவாக நடிக்க வந்து திடீர் ட்விஸ்ட்டாக வில்லன் ரோலில் ஜி.சீனிவாசன் நடிக்க காரணம் யார் தெரியுமா? ஷாத்ஷாத் மனோபாலாதான்!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "சௌக்யமா கொழந்தே"
இந்த டயலாக் உங்களுக்கு மறக்கவில்லையென்றால் நீங்கள் புதியவார்ப்புகள் பார்த்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். கர்ண கொடூரமாய் கத்தி பல்லைக் கடித்து வில்லத்தனம் செய்யும் நம்பியார், அசோகன் காலத்தில் அமைதியாக மூக்குக் கண்ணாடி மூலம் பார்வையாலேயே வில்லத்தனம் செய்து நம்மை எரிச்சலடைய வைத்த நடிகர். ஜி.சீனிவாசன்..

"தொட்டாலே ஷாக்கடிக்கும்.. எலக்ட்ரிக்கலு ஒயரு.... இதை தொடாமலே ஷாக்கடிக்கும் பொன்னுத்தாலிக்கயிறு...
பரமசிவன் கழுத்தினிலே பாம்பும் ஒரு கயிறு....
அந்த பாம்பை விட பயங்கரமாம் பத்தினியின் கயிறு.....
மஞ்சக்கயிறு... தாலி மஞ்சக்கயிறு..."
80க்கு முன்னேயும், 80களிலும் சிலோன் ரேடியோவில் அடிக்கடி மனோரமாவின் குரலில் ஒலிப்பரப்பட்ட சிறப்பான பாட்டு.
மஞ்சக்கயிறு என மஞ்சள்கயிறு தள்ளு வண்டியில் விற்றுக் கொண்டே பாடும் அந்தப்பாடலின் காட்சியை சமீபத்தில் யூடியூபில் பார்க்க நேரிட்டது. அந்த ரேடியோக் காலம் நினைவுக்கு வந்து விட்டது உண்மை. நமக்கு என்ன விதிச்சிருக்கோ அது நமக்கு வந்தே தீரும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் புலியூர் சரோஜாவின் கணவர் ஜி.சீனிவாசன்.
சீனிவாசனை பாரதிராஜா தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்திருப்பார். ஜி.சீனிவாசன் தோற்றத்தில் கொஞ்சம் கரடு முரடா இருப்பார். அதாவது நெஞ்சழுத்தம் உள்ள வயசான கிழவனுக்கு கச்சிதமா பொருந்துவார். கிழக்கே போகும் ரயில் படத்தில் சுதாகரின் அப்பாவான அவர் ஒரு நாவிதர். தன் மகன் சுதாகருக்கு ராதிகாவின் காதலால் ஊர் பஞ்சாயத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி மொட்டையடித்து கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றி வரச்சொல்லி தீர்ப்பு தரும்.
அந்த பையனுக்கு மொட்டை அடிப்பது அதே ஊரை சேர்ந்த ஜி.சீனிவாசன் தான். தன் மகனை தன் கத்தியாலேயே மொட்டையாக்கி விட்ட சீனிவாசன் நிர்க்கதியில்லாமல் தன் கத்தியோடு குளத்து நீரில் இறங்கி அதே சவரக்கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விடுவார்.
படம் பார்ப்பவர் இதயமே நின்று விடும். அப்படி ஒரு அற்புத நடிப்பை சீனிவாசன் தந்திருப்பார். படம் ஹிட்டானதும் பாரதிராஜா 'புதிய வார்ப்புகள்' படத்துக்கு அவரை கூப்பிட்டனுப்பி இருந்தார். படத்தில் ரதியின் அப்பா நாதஸ்வரவித்வான் ரோல் ஜி.சீனிவாசனுக்கு. இந்தப் படத்திலும் மகளை நினைத்து நாதஸ்வரம் ஊதி ஊதி வாயிலிருந்து ரத்தம் நாதஸ்வரம் வழியாக வந்து உயிரை விடுமாறு காட்சி அமைத்திருந்தார் கதாசிரியர்.
வில்லனாக ஊர் பெரியவரா "அமாவாசை"ன்னு கைத்தடியோட நடிக்க அழைக்கப்பட்டவர் கே.கே.சௌந்தர். படப்பிடிப்பு நடக்கும் ஊருக்கு எல்லோரும் வந்தாச்சு. வில்லன் கே.கே.சௌந்தர் காட்சி அன்றைக்கு எடுக்க வேண்டும். அன்று பஸ் லேட்டோ என்னவோ அவர் வரவில்லை. மனோபாலா தான் அசிஸ்டன்ட் டைரக்டர்.
வில்லனை ஷாட்டுக்கு ரெடியாக்க பாரதிராஜா சொன்னதும் மனோபாலா தேடிப் பார்த்தால் சௌந்தர் வரவேயில்லை. டைரக்டரோட கோபத்துக்கு பயந்த மனோபாலா ஜி.சீனிவாசனை வில்லன் மேக்கப், உடைகளோடு கொண்டு போய் ஸ்பாட்டில் நிறுத்தி விடுகிறார். பாரதிராஜா மனோபாலாவை பார்க்க சௌந்தர் வராததை சொல்லாமல் "போன படத்திலும், இந்தப் படத்திலும் ஒரே மாதிரி அப்பா ரோல்னு பீல் பண்ணாரு. அதான் ரோலை மாத்திக் கொடுத்துட்டேன்"னு சமாளிச்சிருக்கார் மனோபாலா.
ஆனா அது தான் ஜி.சீனிவாசன் வாழ்க்கையில் மனோபாலா ஏற்படுத்திய திருப்புமுனை. அந்த நாயகி ரதியை ஆசைப்படும், உஷாவை சீரழிக்கும் அந்த வில்லன் ரோலுக்கு ஜி.சீனிவாசனின் முகமும், உடலும் ஒத்துழைக்க செம நடிப்புன்னு பெயரெடுத்தார். படம் பார்த்த பெண்கள் அவரை திட்டாமல் வெளியே போனதில்லை. அவரை கட்டிப் பிடிக்க வைத்து கத்தியால் ரதி கொல்லும் காட்சி எதிர்பார்க்காத அருமையான க்ளைமேக்ஸ்.
அவருக்கு கிடைக்க வேண்டியது ஒன்று. கிடைத்தது வேறு ஒன்று. ஜி.சீனிவாசன் அதன் பின் பிஸி நடிகரானார். அப்பா ரோலுக்கு தாமதமாகி வந்ததால் மாறிப்போன கே.கே.சௌந்தரும் நல்ல நடிப்பைத் தந்து பெயரெடுத்தாலும், ஊர்ப் பெரியவர் ரோல்களாக தந்து அவரை ஒப்புக்கு சப்பாணியாக்கியது தமிழ்த்திரையுலகம்.
புலியூர் சரோஜாவின் கணவன் ஜி.சீனிவாசன் பிறகு பெரிய நடிகராக அவர் மகன் விபத்தில் இறக்கும் வரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் நல்ல கதாசிரியர். அவர் கதைகள் சில படமாக வந்திருக்கின்றன. அவரே நான்கு படங்களை இயக்கியும் இருக்கிறார்.
78ல் வந்தப் படம் தான் "உனக்கும் வாழ்வு வரும்". அதில் தான் மனோரமா பாடிய இந்தப் பாடல். தாலிக்கயிறின் மகத்துவத்தை சொல்லும் இந்த பாடல் வரிகளை எழுதியது வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம். இசை சங்கர்-கணேஷ். முத்துராமன், ஸ்ரீப்ரியா நடித்த இந்தப்படத்தை இயக்கியது வேறு யாருமல்ல ஜி.சீனிவாசன் தான்.
"உனக்கும் வாழ்வு வரும்". ஜி.சீனிவாசன் அந்தப் படத்துக்கு வைத்த டைட்டில். தனக்காகவே வைத்துக் கொண்ட டைட்டில்... அப்படித்தான் நடந்தது..... விதித்தது..... ராஜன்.பி.தேவ் தமிழில் நடிக்கும் வரை அவரது குரலாக இருந்தவரும் ஜி.சீனிவாசன் தான். மனிதனில் மாதுரியின் தாத்தா, வெள்ளை ரோஜாவில் மகளுக்கே சவப்பெட்டி செய்யும் பிரபுவின் அப்பா, ராணுவ வீரன் படத்தில் ஊருக்குள் கண் தெரியாதவராக நடித்துக் கொண்டு நக்சலைட் சிரஞ்சீவிக்கு உளவு சொல்லும் உளவாளி, பெண்மணி அவள் கண்மணி படத்தில் மகள் புகுந்த வீட்டில் படும் துயர் கண்டு துடிக்கும் தந்தை என ஜி.சீனிவாசன் செய்யும் ரோலுக்கு புண்ணியம் செய்பவர்.
சீனிவாசன் நடிக்கும் போது அவரிடம் நடிப்பே தெரியாது. அத்தனை நேர்த்தி. ஆழ்ந்த அஞ்சலிகள் ஜி.சீனிவாசன் சார். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் ஜி.சீனிவாசன் நேற்று உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.












Click it and Unblock the Notifications