"என் பிள்ளை இப்படி பண்ணா ஏத்துக்கமாட்டேன்" மண்சோறு விவகாரம் குறித்து நடிகர் சூரி விளக்கம்!
மதுரை: என் வீட்டின் குழந்தைகள் யாரும் மண்சோறு சாப்பிட்டால் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். அதனால் என் தம்பிகள், ரசிகர்கள் யாரும் அப்படி எந்த படத்தை கொண்டாட தேவையில்லை என்று கூறிய அவர், மதுரை மண்ணின் மைந்தனாக அரசியல்வாதியாக அல்லாமல் நடிகராக நிற்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் மே 16ஆம் தேதி மாமன் திரைப்படம் வெளியாகியது. விலங்கு இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்கா மகன் மற்றும் தாய்மாமன் இடையிலான பாசத்தை பேசும் இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உறவுகளை பேசும் படம் என்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாமன் படம் வெற்றிபெற வேண்டும் என்று அவரின் ரசிகர்கள், ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்டோர் நேற்று முன் தினம் மண் சோறு சாப்பிட்டனர். இந்த சம்பவம் பல்வேறு ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, முட்டாள்தனமாக இப்படி ரசிகர்கள் செய்யக் கூடாது. யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுங்கள். இப்படி செய்வதால் யாருக்கும் எந்த பிரயோஜனும் இல்லை. இதனை பார்க்கவே கேவலமாக உள்ளது. கதை நன்றாக இருந்தால் படம் ஓடிவிடும். மண்சோறு சாப்பிடுவதால் படம் ஓடாது என்று தெரிவித்தார்.
சூரியின் இந்த கருத்து பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் ரசிகர்கள் அமர்ந்து நடிகர் சூரி படம் பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சூரியிடம் மண்சோறு சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி, என் குடும்பத்தில் குழந்தைகள் இருக்காங்க.. அவர்கள் இப்படி செய்தால் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
படத்தை கொண்டாடுவதில் தவறு இல்லை.. கொண்டாடுவதற்கு ஏராளமான முறைகள் உள்ளது. அப்படி இருக்கையில் இப்படியெல்லாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. நான் மட்டுமல்ல, எந்தவொரு நடிகரும் எனக்காக மண்சோறு சாப்பிட வேண்டும் என்று சொல்வதில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு, செல்ல வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் நடிகராக உங்கள் முன் தொடர்ந்து நிற்க வேண்டும். இந்த இடத்தை தக்க வைக்கவே போராட வேண்டிய நிலை உள்ளது. மண்ணின் மைந்தனாக அரசியல்வாதியாக அல்லாமல், நடிகராக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications