வனிதா விஜயகுமார் படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Mrs & Mr படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் 'ராத்திரி சிவராத்திரி' பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர் என்றும் படத்திலிருந்து இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்றார். ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் கதாநாயகியாக நடித்த வனிதா, நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்தார்.
இப்போது வனிதா இயக்குநராக களமிறங்கியுள்ளார். வனிதா இயக்கி அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் MR & MRS. இதில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்திருக்கிறார். ஷகீலா, செஃப் தாமு, ஸ்ரீமன், ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா என பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன், நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார். அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில், தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசையில் 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ராத்திரி சிவராத்திரி பாடலை வனிதா இயக்கியுள்ள படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications