இளையராஜா, வைரமுத்து இடையே இப்படி ஒரு பந்தமா? துள்ளி குதித்து விளையாட வேண்டிய வயதில் வைகை அணையில்..!
சென்னை: இளையராஜா, வைரமுத்து இடையே இப்படி ஒரு பந்தமா? வைகை அணை கட்டுமான பணியின் போது தொடங்கியதா இவர்களுக்குள்ளான நட்பு?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...'
அட்டகாசமான வரியில்லை?.. இதுக்கு ராஜா அழகான ஒரு டியூன் போட்டு இந்தப் பாடலை நம்முடைய இதயத்தில் வாழைப்பழ ஊசி போல நுழைத்து விடுவார்.

அந்த அழகான வரியை எழுதியவர் வைரமுத்து. இரண்டு பேரும் இணைந்தாலே அப்படி ஒரு மேஜிக். 80களில் இவங்க காம்போ பாடல்கள் மாதிரி வேறு காம்போ அமையவில்லை. பின்னாளில் வேறு இசையமைப்பாளர்-வைரமுத்து சேர்ந்த போது கூட அது சொற்கள் இட்டு நிரப்பிய மாதிரி தான் இருந்தது. அதெல்லாம் ஹிட் தான் என்பது வேறு விஷயம். ஒரு 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு', 'உதயகீதம் பாடுவேன்', 'பூங்காற்று திரும்புமா' மாதிரி மேஜிக் பண்ண முடியல என்பது நிஜம்.
ராஜா பள்ளிப் படிப்புக்கு காசில்லாத ஒரு காலம் இருந்தது. கட்டணம் கட்ட முடியாததால் பள்ளிக்கு போக முடியவில்லை. அப்போது வைகை அணை கட்டுமானப்பணி அங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கான என்ஜினியர்களின் அலுவலகத்தில் ராஜா சேர்கிறார் தினக்கூலிக்கு. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம். அப்போ மாசம் முப்பது ரூபாய்.
டிரவுசர் போட்ட சின்னப்பையன் என்பதால் அலுவலகத்தை ஒட்டி அமைக்கப்பட்ட பூங்காவில் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை கொடுக்கிறார்கள். அந்த வேலை ராஜாவுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. காரணம் பெருங்குரலெடுத்து பல பாடல்களை ராஜா பாடமுடியும். அப்படி ஒரு நாள் பாடும்போது என்ஜினியர் வந்து விடுகிறார். ராஜாவை பாடலையும், பேச்சையும், இனௌசன்ஸையும் கண்ட அவர் அலுவலகத்தில் ட்ரான்ஸ்ஃபர் தருகிறார்.

இந்த கோப்பை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்க வேண்டும். அவரிடம் கையெழுத்து வாங்கி இவரிடம் கொடுக்க வேண்டும். இந்த வேலை கூடிய சீக்கிரம் சலித்து விடுகிறது. காரணம் பாட்டு பாட முடியாதது தான். எப்படியோ திரும்பவும் பார்க் பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலைக்கு வந்த பிறகு தான் அவருக்கு இயல்பே வந்தது.
மறுபடியும் அவர் குரல் ஆனந்தக் கூத்தாட்டத்தில் பாடுகிறது. இவ்வளவு ஆனந்தத்துக்கு நடுவே அவர் கண்ணீர் விடும் நிகழ்வுகளும் அந்த ஊரில் நடக்கிறது. வைகை அணை கட்டுவதற்காக 14 கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம் பெயருமாறு அரசு பணிக்கிறது.
காமக்காப்பட்டி போன்ற ஊர்களிலிருந்து மக்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுது கொண்டு சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அதை பூங்காவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராசய்யா என்கிற சிறுவனுக்கு கண்கள் கலங்குகிறது. அந்த சாரை சாரையாக செல்லும் 14 கிராம மக்களில் மேட்டூர் என்கிற கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் செல்கிறது.
வடுகப்பட்டி நோக்கிச் செல்லும் அந்த ராமசாமி - அங்கம்மாள் குடும்பத்தில் கலங்கிய உள்ளத்தோடு செல்கிறான் ஒரு சிறுவன். அவன் தான் பின்னாளில் கவிஞனாக மாறிய வைரமுத்து.
எல்லாப் பாடல்களிலும் ஒரு மண்வாசனை, ஒரு சிறுவனின் குதூகலம், கோபம், அழுகை, பிரிவு எல்லாம் ராஜா - வைரமுத்து பாடல்களில் வெளிப்பட்டதன் ரகசியம் இது தானோ?.
வாழ்க்கையின் வலிகள் பிரதிபலித்த கலைஞர்கள். இடையில் ஏற்பட்ட உறவு இன்று வேறு வேறு பூங்கா- சாலைகளில் பிரிந்து போய்க் கொண்டிருக்கிறது. நஷ்டம் பாட்டு ரசிகர்களுக்கு தான். அவர்களுக்கில்லை... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications