ஆன் லைனில் ரம்மி விளையாடினா மட்டும் சூதாட்டம் இல்லையா?
சென்னை: ஜங்கிலி ரம்மி, எம்பி,எல்..ரம்மி சர்க்கிள் போன்ற ஆப்களில் ரம்மி விளையாடுங்கள்...நான் நிறைய சம்பாதித்தேன்...நீங்களும் சம்பாதிக்கலாம்...இன்னும் விளையாடி ஒரு பைக் வாங்க போறேன்னு இளைஞர் ஒருவர் சொல்வது போல ஒரு விளம்பரம் வருது.
காசு வைத்து ரம்மி விளையாடினால் அது சூதாட்டம் என்று போலீஸ் துரத்தி துரத்தி ஓடிப் பிடிக்கிறார்கள். இது சூதாட்டம் இல்லையா? அதுவும் ரம்மி விளையாடி ஒரு ரூபாய் இல்லை ரெண்டு ரூபாய் இல்லை...50 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சேன்னு ஒரு இளைஞர் சொல்கிறார்.
இப்படி ரம்மி விளையாடி ஜெயிச்ச பணத்தில்தான் மனைவிக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தேன்னு இன்னொரு இளைஞர் சொல்கிறார். இது எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் விளம்பரமாக வருகிறது.

லாக்டவுன் காலம்
லாக்டவுன் காலத்தில் இளைஞர்கள் அதிகமான பேர் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறார்கள். அவர்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்து, இதன் மூலமாவது சம்பாதிக்கலாம்.. சும்மாத்தானே இருக்கிறோம் என்று நினைத்து, வங்கியில் இருக்கும் பணத்தை ஆப்பில் கட்டிவிட்டு விளையாடத் தொடங்கி விடுவார்கள்.

எமகாதக விளையாட்டு
இவன் அப்போதுதான் விளையாட ஆரம்பித்து வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைனில் பணத்தை கட்டிவிடுவான். ஆனால், இவனுக்கு எதிரில் இருந்து, விளையாடுபவர் கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது இருப்பார். அவர் இந்த விளையாட்டில் கரைக்கண்டவராக இருப்பார். அவரிடம் ஓரிரு முறை தோற்றுப் போனாலும், இவனால், விளையாட்டை விட்டு வர முடியாது.

விட்டதை பிடிக்க
விட்டதை பிடிக்கணும்னு நினைச்சு மறுபடியும் மறுபடியும் என்று விளையாட ஆரம்பிக்க, கடைசியில் வங்கியில் பணம் போனதுதான் மிச்சம். இவன் விளையாட்டை கைவிட்டுவிட்டு வந்து விடுவான். அனால், வங்கியில் பணம் போனதை வீட்டில் எப்படி சொல்வது? மனசுக்குள் போட்டு புழுங்கி லாக்கடவுனில் மன உளைச்சல் வந்து அவதிப்பட வேண்டியதுதான்.

இதுக்கெல்லாமா விளம்பரம்?
ஆன்லைனில் ரம்மி விளையாடி என்னை மாதிரி சம்பாதிச்சு, மனைவிக்கு நல்ல மாடல் மொபைல் வாங்கிக் குடுங்க...ஐ போன் வாங்கிக் குடுங்க...பைக் வாங்குங்க.. என்று இதற்கெல்லாம் விளம்பரம் தருவது தொலைக்காட்சிகள்?அதுவும் இந்த லாக்டவுன் காலம் ரொம்ப கொடுமையானது என்று தெரியாதா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு. சூதாட்டம் எப்படி விளையாடினாலும் சூதாட்டம்தானே? இல்லை..இந்த விளையாட்டுக்கு அப்படி பெயர் இல்லையா?












Click it and Unblock the Notifications