கமல்ஹாசன் மனதில் தினம் உதிக்கும் பாடல் "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா"! ஏன் தெரியுமா?
சென்னை: கமல்ஹாசனுக்கு இன்று வரை மறக்காமல் நினைக்கும் நண்பர்களில் இவரும் முக்கியமானவர், அவர் யார் தெரியுமா, அவருக்கும் உலகநாயகனுக்குமான நட்பு எப்படிப்பட்டது என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கமல் மீசை அரும்பியும், அரும்பாத காலத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்தார். தங்கப்பன் மாஸ்டரிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்த போது அங்கு ஒரு அருமையான நண்பன் கமலுக்கு கிடைத்தார். ரகுராம்...

ரகுராம் தங்கப்பனிடம் உதவியாளராக இருந்த சுந்தரம் மாஸ்டர் தனி மாஸ்டராக அமைக்க விலகிய போது அங்கு சேர்ந்தவர். ரகுராம் சோப்ராவிடம் சேர தங்கப்பனிடமிருந்து விலகிய போது அந்த இடத்துக்கு வந்தவர் கமல். இது யாரு நம்ம இடத்துக்கு வந்த ஆள்னு பார்க்க வந்து இருவரும் நட்பானார்கள். கமலின் உற்ற நண்பன் ரகுராம். எப்போதும் நாம் ஒரு விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறோம் என்றால் அதே ஆர்வத்தோடு வேறொரு நண்பன் கிடைத்து விட்டால் அந்த நட்புக்கு நேரம், காலம் போவதே தெரியாது.
அப்படித்தான் நடனத்தில் ஆர்வமுள்ள கமலுக்கு ரகுராம் நட்பு. மேலும் ரகுராமின் வீட்டில் தானே பத்மா சுப்ரமண்யம் இருக்கிறார். அவரின் பரதத்தையும் அருகிலிருந்து பார்க்கலாமே என்பது கமலின் ஆசை. "உன் அத்தை பத்மாவை நானே கல்யாணம் செய்துக்கப் போறேன்" என விகல்பமில்லாமல் சொல்லும் அளவுக்கான நட்பு இருவருடையது.
இருவரும் இணைந்து விட்டால் கச்சேரி, நடனம், புது நாடகம் போடுவது என கூத்து தான். இருவரும் தங்கப்பன் மாஸ்டர் இருந்த காலங்களில் புதிய புதிய முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள். கமல் பரதம் கற்றதனாலோ என்னவோ அவர் நடனத்தில் ஒரு பெண்மை ஆரம்பத்தில் இருந்தது. அதை ஆண்மைத்தனமான நடனமாக மாற்றியது ரகுராம் தான்.
அப்படி ரகுராம் பரதத்துக்கு முன்பாக கதகளி படித்தார். கோபிநாத், கே.ஜே.சரசா ரகுராமின் குருக்கள். ஐந்து வயது முதல் நடனம் பயின்ற ரகுராம் படிக்காத மேதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். திருவருட்செல்வர், அருணகிரிநாதர் படத்திலும் நடித்திருக்கிறார். சோப்ரா மாஸ்டர் எம்ஜிஆரின் அன்பே வா படத்துக்கு நடனம் அமைத்த போது ரகுராமுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு வந்தது.
1974ல் தனியாக நடனம் அமைத்தார் ரகுராம்.
அப்படி இருவரும் தங்கள் ஐடியாக்களை பரிமாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கமல் நடிகனாகிறார். பாலச்சந்தர் சொல்லத்தான் நினைக்கிறேன் எடுத்த போது தங்கப்பன் மாஸ்டரை அழைக்க பேச்சுவார்த்தை வந்த போது வேறொரு இளமையான மாஸ்டரை வைக்கலாம் எனத் தீர்மானிக்கிறார் கே.பி.
உடனே கமல் அழைத்து வந்த மனிதர் தான் ரகுராம். 'அவர்கள்' படத்தில் இருவரும் சேர்ந்து நடனம் அமைக்க பாலச்சந்தர் சொல்ல இருவரும் சேர்ந்து அமைத்தது தான் அந்த கிரிக்கெட் நடனக் காட்சி. டைட்டிலில் கமலஹாசன் - ரகுராம் எனப்பெயரும் வந்தது. அதன் பின் தொடர்ந்து இருவரும் கமல் படங்களில் நடனம் அமைக்கத் தொடங்கினார்கள்.
ரகுராமின் சோப்ரா மாஸ்டர் ஸ்டைலும், கமலின் பரதம், கதக் கலந்து புதுமையாக நடனம் அமைத்தார்கள். அது புது பாணியாக அன்று போற்றப்பட்டது. அவர்கள் படம் முடிந்த போது ரகுராம் தன் கூட நடனமாடிய கிரிஜாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மதனோற்சவம் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கமலுக்கு வாணியோடு திருமணம் முடிவானது.
இருவரும் இணைந்த 'ஏக்துஜே கேலியே', 'உனக்கென்ன மேலே நின்றாய்', 'காமனுக்கு காமன்' பாடல்களின் நடனங்கள் ரகுராம்-கமல் கூட்டணியில் பிறந்த முத்துக்கள். இதில் காமனுக்கு காமன் பாடல் இடம்பெற்ற படமான 'உருவங்கள் மாறலாம்' ரகுராமின் சொந்த தயாரிப்பு. உனக்கென்ன மேலே நின்றாய் பாடலில் பொம்மை போன்ற ஒரு ஸ்டெப் இருக்கும். அப்போது மிகவும் பேசப்பட்ட ஸ்டெப்.
மான்டெஜ் ஸாங் எனும் அற்புத முறையை டூயட்டுக்குள் கொண்டு வந்தது ரகுராம் தான். அந்திமழை பொழிகிறது பாடலும், வளையோசை கலகலகலவென பாட்டு இவரது மான்டெஜ் கம்போஸிங் தான். 'சனம் தேரி கஸம்' ஹிந்திப் படத்துக்கு பிறகு நடனம் தொடர்பான படம் ஒன்றை ரகுராமோடு கலந்து ஆர்.சி. சக்தி எடுக்க தீர்மானமானது.
'அனுபல்லவி' என்று பெயரிடப்பட்ட அப்படம் தொடங்கும் முன் 'சங்கராபரணம்' ஹிட் கொடுத்த இயக்குனர் கே.விஸ்வநாத்திடமிருந்து அழைப்பு. 'சாகரசங்கமம்' படமும் நடனம் பற்றிய படம். அதில் ஹிட் இயக்குனர் கே.வி இருந்ததால் அனுபல்லவி நிறுத்தப்பட்டு சாகரசங்கமம் தொடங்கியது.
அதுவரை இருந்த ரகுராமும் மாறி கமலின் மாஸ்டராக கோபி கிருஷ்ணா அதில் பணியாற்றினார். ஒரு மாதம் கடும் பயிற்சிக்குப்பிறகு அந்தப் படத்தின் நடனங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. பின் ரகுராமும் பணியாற்றினார் அந்த படத்துக்கு. எஸ்.பி.ஷைலஜாவோடு வாக்குவாதம் செய்யும் கமல் 'பஞ்ச பூதங்களும் முக வடிவாக ' காட்சியில் பரதம், கதகளி, குச்சிபுடி என ஆடிக்காட்டும் அந்த காட்சி நடனம் அமைத்த ஐடியா ரகுராம் மற்றும் கமலுடையது தான்.
கமல்-ரகுராம் நட்புக்காக கமல், ரகுராம் தயாரித்த மலையாளப் படத்தில் நடித்தும் கொடுத்தார். தமிழில் பெரும் வெற்றி பெற்று ஓடிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை மலையாளத்தில் தயாரித்தவர் ரகுராம் தான். நாயகனாக ரவிகுமார் நடித்த இப்படத்தில் சங்கர் கணேஷ் பாத்திரத்தில் கமல் நடித்தார். அப்படத்தின் வெற்றிக்கு கமலின் நடிப்பு கௌரவ வேடமானாலும் பெரும் துணை புரிந்தது. ரகுராம் ரஜினி, மிதுனை வைத்து 'பாக்யதேவதா'(நான் சிகப்பு மனிதன்) படத்தையும் வங்காள மொழியில் இயக்கி உள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த முத்துராமன் மகன் கார்த்திக், நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை வைத்து 'விஸ்வநாதன் வேலை வேணும்' படத்தை அபஸ்ரவம் ராம்ஜியுடன் இணைந்து தயாரித்தது ரகுராம் தான். ரகுராம் பின்னாளில் நாட்டியாலயா என்கிற பள்ளி திறந்த போது குத்து விளக்கேற்றி அதை திறந்து வைத்தது கமல் தான்.
ரகுராம் மாஸ்டர் மாஸ்டராகவே கமலின் அவ்வை ஷண்முகி படத்தில் தோன்றி இருப்பார். கமல் தனது தசாவதாரம் படத்தில் கொடுத்த 'அப்பாராவ்' ரோல் தான் ரகுராமை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. "சார் ஸ்பீக் மெனி லேங்க்வேஜஸ்....ஹி ஸ்பீக் ஃபைவ் லேங்க்வேஜஸ் இன் தெலுகு"ன்னு அப்பாராவ் சொல்றது தனி ஸ்டைல் தான்....
பல்ராம் நாயுடு-அப்பா ராவ் ஜோடி லாரல் & ஹார்டி ஜோடி போல நல்ல பெயரை பெற்றதாலேயே 'சபாஷ் நாயுடு' படத்திட்டம் கமல் மூளையில் உதித்தது. ஆனால் ரகுராம் அந்தப்படம் தொடங்கும் முன்பே இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்பாராவ் ரோலில் ப்ரம்மானந்தம் நடிக்க இருந்து அதுவும் படமாக வில்லை.
கமலின் பல நண்பர்கள் மறைந்தாலும் ரகுராமின் இழப்பு கமலுக்கு பெரிய இழப்பு தான். நிச்சயம் கமல் மறந்திருக்க மாட்டார் ரகுராமை....அவரின் மனதில் நிச்சயம்... "உனக்கென்ன மேலே நின்றாய்....ஓ....நந்தலாலா... இவ்வாறு அந்த பதிவில் செல்வன் அன்பு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications