"நயன்தாரா.." டாஸ்மாக் கேஸில் தேடப்படும் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரனுடன் எப்படி நெருக்கம்? பிரபலம் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ரத்தீஷ் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மாரிதாஸ், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர், ரத்தீஷ் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததாகவும், கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக நயன்தாரா மற்றும் ரத்தீஷ் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் பதற்ற நேரத்தில், ரத்தீஷ் நயன்தாராவிடம் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக எந்த நடிகரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறியதாகவும், அந்த செய்தியை நயன்தாரா மற்ற நடிகர்களுக்கு பரப்பியதாகவும் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதை தேசத்துரோகமாக கருதி, நயன்தாராவை ED விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நயன்தாரா தனது கணவரோடு வெளிநாட்டுக்கு போய்விட்டதாகவும் அவர்களை இந்தியா அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், மாரிதாஸ் அடுக்கடுக்காக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், மாரிதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இவை சமூக வலைதளங்களில் பரவும் யூகங்களாகவே கருதப்படுகின்றன. டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் தனி நபர்களை விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நயன்தாரா தரப்பிடம் கருத்து கேட்க முயற்சி செய்தோம். இதுவரை அவர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தரப்படவில்லை.
அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மூலம் நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோருக்கு ரொக்கப்பணம் வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று ஒரு தகவல் சுற்றி வருகிறது.

டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாகவும் இந்த பணம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நோக்கில் திரைப்படத் துறையால் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. Dawn Pictures போன்ற நிறுவனங்கள் மூலம் பல நடிகர்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடிகர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.












Click it and Unblock the Notifications