நீயா நானாவில் பட்டியலின பெண் சொன்ன வார்த்தை..கோபி நாத் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் வாயடைத்த அரங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோடில் நகரத்து மாப்பிள்ளையை மணமுடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் மற்றும் ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த கிராமத்து அம்மாக்கள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அப்போது பட்டியலின பெண் ஒருவர் சொன்ன வார்த்தையை வைத்து கோபிநாத் அரங்கத்தில் இருந்தவர்களிடம் கேள்வி கேட்க, அங்கிருந்த கிராமத்து அம்மாக்களால் பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதம் வைத்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி 10 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதற்கு முதல் காரணம் கோபிநாத்தாக இருந்தாலும் இன்னொரு காரணம் மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அன்றாட பிரச்சனைகளில் இருந்து கேள்விகள் கேட்பதும் தான்.

நீயா நானா ப்ரோமோ
அந்த வகையில் தான் இந்த வாரத்தில் கூட நகரத்து மாப்பிள்ளையை மணமுடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்களும், கிராமத்து இளைஞர்களை பெற்றெடுத்த அம்மாக்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கிராமத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு எதனால் நகரத்து ஆண்களை திருமணம் செய்து கொள்ள ஆசை என்ற பல காரணங்களை சொல்கிறார்கள். அது கிராமத்து அம்மாமார்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பெண்களின் குமுறல்
அதிலும் ஒரு பெண் நாங்கள் கிராமத்து ஆண்களை திருமணம் செய்யாததற்கு காரணமே அவர்களுடைய அம்மாக்கள்தான், அவர்களுடைய அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கிராமத்து இளைஞர்கள் கேட்கிறார்கள் என்று ஒரு குற்றசாட்டை வைக்கிறார். அதுபோல இன்னொரு பெண் நான் நகரத்து ஆணை திருமணம் செய்து கொண்டால் அவர் பல வகைகளில் முற்போக்காக யோசிப்பார், என்னுடைய ஃபேஷனுக்கு துணையாக இருப்பார் என்று தன்னுடைய ஆசையை சொல்லி இருக்கிறார்.
அம்மாக்களின் ஏக்கம்
இதை ஏற்றுக் கொள்ளாத கிராமத்து அம்மாக்களில் இருந்து ஒரு பெண் கிராமத்து பையனை கல்யாணம் பண்ணுனா கணவன் மனைவிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அம்மாக்கள் தலையிட்டு அதை சரி செய்வார்கள் என்று சொல்ல, இதை ஏற்றுக் கொள்ளாத இளம் பெண் ஒருவர் கணவன் மனைவி பிரச்சனையில் லேசாக உள்ளே வந்து அந்த பிரச்சனையை பெருசா பண்ணிட்டு போயிருவாங்க என்று சொன்னதும் எதிர்தரப்பிலிருந்த அம்மா இதை ஏற்றுக்கொள்ளாமல் அப்போ நகரத்து அம்மாக்கள் மட்டும் உங்களை ஒன்றுமே சொல்ல மாட்டாங்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
பலருக்கு இதே பிரச்சனை
அதுபோல இன்னொரு ப்ரோமோவில் ஒரு பெண் பேசும்போது, கிராமத்தில் அதிகமாக வயசான ஆண்கள் தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்கு எதிர் தரப்பில் இருந்த ஒரு அம்மா நீங்க நகரத்து பசங்களை தான் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு சொல்றது போல எல்லாரும் சொல்லிட்டு இருந்தா உங்க வீட்டுல இருக்கிற அண்ணன் தம்பிகளுக்கும் எப்படி கல்யாணம் நடக்கும்? என்று பாயிண்டை பிடித்து கேள்வி கேட்கிறார்.
ஜாதி பிரச்சனை
இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஒரு பெண் எதிர் தரப்பில் பேசிய பெண்ணை பார்த்து இந்த பாப்பா என்ன காஸ்ட், என்ன எதுன்னு எனக்கு தெரியாது. ஆனால் இப்போ அந்த பாப்பா சரின்னு சொல்லுச்சுன்னா இந்த நிமிஷம் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார். அதற்கு அந்தப் பெண் பேசும்போது நான் இப்போ ஓபனா என்னுடைய ஜாதியை சொல்றேன் சார் நான் எஸ்சி என்று சொல்கிறார் இதைக் கேட்டதும் எதிர் தரப்பில் ஒரு அமைதி நிலவுகிறது.
இளம் பெண்ணின் வேதனை
அதைத்தொடர்ந்து அந்தப் பெண் பேசும்போது காதல் திருமணம் அனுமதிக்கப்படுகிறது ஆனால் அது எம்பிசி மற்றும் பிசி இவர்களுக்குள் காதல் வந்தால் ஒத்துக்குறாங்க. ஒரு எம்பிசி ஜாதியில் இருப்பவர் எஸ்சி காஸ்டில் கல்யாணம் பண்ணனும் என்றால் ஒத்துக்க மாட்டாங்க என்று சொன்னதும், கோபிநாத் முதலில் பேசிய அம்மாவிடம் இப்போ அந்த பொண்ணு ஓபனா தான் பட்டியலின பெண் என்று சொல்லுறாங்க இப்பவும் உங்களுக்கு ஓகேவா என்று கேட்கிறார்.
கோபிநாத் கேட்ட கேள்வி
அதற்கு முதலில் பேசிய அம்மா ஓகே சார் என்று சொல்கிறார். ஆனால் முதலில் பேசிய சவுண்ட் அவருடைய குரலில் இல்லை என்பதை கவனித்த கோபிநாத் முதலில் பேசிய வேகம் இப்போ இல்லையே என்று சொன்னதும் அதற்கு அந்த பெண் நான் எங்க வீட்டுக்காரர் கிட்ட பேசணும் சார் என்று சொன்னதும், அதற்கு கோபிநாத் அப்போ முதல்ல மட்டும் நீங்க வீட்டுக்காரர் கிட்ட கேக்கலையே என்று கேட்கிறார்.
பீல் பண்ண வைத்த வார்த்தை
இதற்கு அந்த இளம் பெண் இந்த பிரச்சனை நான் மட்டும் அனுபவிக்கல, இதே நிலைமை பலருக்கு இருக்கிறது. இவங்க இப்படி மாற்றி பேசுறது பிரச்சனை இல்ல சார். நாங்க எல்லா இடத்திலும் இதே பிரச்சனையே தான் அனுபவிச்சிட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு புதுசு கிடையாது, படிக்கிற காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் எங்கேயோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் என்னை மாதிரி பொண்ணுங்களும் பசங்களும் இதே ஒதுக்குதல் மற்றும் ஏளனமாக பார்ப்பதை அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம் என்று தழுதழுத்த குரலில் சொல்ல, அதற்கு பதில் சொல்ல முடியாமல் எதிர் தரப்பில் இருந்த அம்மாமாக்கள் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications