வைல்ட் ஃபயர்..வசூலில் பட்டைய கிளப்பும் புஷ்பா-2.. ஓடிடியில் ரிலீஸ்? தயாரிப்பு நிறுவனம் சொன்ன அப்டேட்
சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் புஷ்பா 2 படம் ஜனவரி 9ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் ஹிண்ட் கொடுத்துள்ளது.
தெலுங்கு நடிகராக மட்டுமே அறியப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரு வெற்றி பெற்றது.

இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
புஷ்பா-2:
புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
வசூல் சாதனை:
தற்போது புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை செய்து வருகிறது. மாஸ் ஆக்சன் படமான புஷ்பா 2 படம் வெளியான சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டியது. அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளது.
ரூ.1508 கோடி வசூல்:
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ரீலீசான தேதியில் இருந்து இந்த படம் வெறும் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் ரிலீசான போது அல்லு அர்ஜுனை பார்க்க வந்த பெண் நெரிசலில் சிக்கி பலியானது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து படத்துக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்தது.

ஓடிடி ரிலீஸ் தேதி?:
இதனை அடுத்து புஷ்பா 2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் நிலையில் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஓடிடிட்டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் அதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எப்போது ரிலீஸ்?:
தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்," புஷ்பா 2 தி ரூல் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. இந்த மிகப்பெரிய விடுமுறை சீசனில் மிகப்பெரிய பளாக் பஸ்டர் திரைப்படம் புஷ்பா2வை பெரிய திரைகளில் மட்டும் கண்டு மகிழுங்கள். இது 56 நாட்களுக்கு முன் எந்த ஓடிடியிலும் இருக்காது! உலகளவில் திரையரங்குகளில் காட்டுத் தீ புஷ்பா தான்" என விளக்கம் அளித்துள்ளது. கடந்த 5ஆம் தேதி படம் வெளியான நிலையில் தற்போது 15 நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் 56 நாட்கள் கடந்து தான் ஓடிடியில் ரிலீஸ் என குறிப்பிட்டு இருப்பதன் மூலம் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் தொடக்கத்தில் தான் புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.













Click it and Unblock the Notifications