Rekhachithram OTT: இதுக்கா இவ்ளோ பில்ட்அப்? ஹைப் கொடுத்து ஏமாற்றிய மலையாளம் த்ரில்லர் ரேகாசித்திரம்
கொச்சி: மலக்கப்பாரா வனப்பகுதியில் தற்கொலை செய்துகொண்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. இது யார், எப்படி வந்தது என்ற புதிரை அவிழ்க்க முயல்கிறது "ரேகாசித்திரம்" (Rekhachithram OTT Review). மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று இது. மம்மூட்டி ஏஐ மூலமாக தோன்றுகிறார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
எப்படி, மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் ஆஹோ ஓஹோ என புகழப்பட்டதோ, பிறகு ஓடிடியில் வந்த பிறகு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதோ அதே கதிதான் ரேகாசித்திரத்திற்கும் நேர்ந்துள்ளது. இதைவிட அருமையான த்ரில்லர்கள் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் வந்துவிட்ட நிலையில் இந்த படத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஹைப் ஏன் எனத் தெரியவில்லை.

பணியின்போது ஆன்லைன் ரம்மி விளையாடியதால் சஸ்பெண்ட் ஆகும் காவல் அதிகாரி விவேக் கோபிநாத் (ஆசிஃப் அலி), மலக்கப்பாரா மலைக்கிராம காவல் நிலையத்துக்கு மாற்றலாகிப் போகிறார். முதல் நாளே, காட்டுப்பகுதியில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது, பல வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை பற்றிய வாக்குமூலம் கொடுப்பது, பலியானது யார்? எப்படி இந்த கொலை நடந்தது? யார்தான் கொலையாளி? தற்கொலை செய்தவருக்கு இந்த பெண்ணுடன் என்ன தொடர்பு? கொலையில் தொடர்புடைய பிற நண்பர்கள் என்ன ஆனார்கள்? - இதற்கான விடைகள்தான் 'ரேகாசித்திரம்' படத்தின்கதை.
ராமு சுனில், ஜான் மணித்திரக்கல் ஆகியோர் எழுதிய திரைக்கதை வழக்கமான காட்சிகளுடன் தொடங்கி சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குநர் ஜோஃபின் டி.சாக்கோவின் மேக்கிங் நேர்த்தியாக இருந்தாலும், கதையின் பலவீனத்தால் படம் சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. 1985-ல் மம்முட்டி நடித்த "காதோடு காதோரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை ரீகிரியேட் செய்திருப்பது கவனிக்க வைத்தாலும், இது படத்தின் மையக் கதைக்கு எந்த விதத்திலும் இயல்பாக உதவவில்லை. அனைத்து சம்பவங்களும் இந்த சூட்டிங்குடன் தொடர்புடையதாக இருப்பது பக்கா செயற்கையாக தெரிகிறது. சூட்டிங்கோடு கொலை தொடர்பான அனைவரையும் இணைப்பது இயக்குநரின் வியூகம் என்றபோதிலும், திரும்ப திரும்ப வரும் சூட்டிங் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
காவல் துறை விசாரணை உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாக உணர வைத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், இது ஒரு செயற்கையான உணர்வை மட்டுமே தருகிறது. வலிந்து திணிக்கப்படாத சண்டைக் காட்சிகள், திகில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலம் என்று சொல்கிறார்கள். ஆனால், படத்தில் எதுவுமே அழுத்தமாக இல்லை என்பதே உண்மை.
அப்பு பிரபாகரின் கேமரா மலக்கப்பாராவை அழகாகக் காட்டுகிறது. ஆனால், ட்விஸ்ட் இல்லாத இடத்தில் கேமரா மட்டும் என்ன செய்யும்? முஜீப் மஜீத்தின் இசையும், ஷமீர் முகமதுவின் கட்ஸ் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. ரேகாவாக நடித்துள்ளவர் மற்றும் சிஃப் அலியின் நடிப்பு மட்டுமே உற்றுநோக்க வைக்கிறது.
நாயகனும் வில்லனும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சிறப்பாக கையாளப்பட்டிருக்கலாம். ஜஸ்ட் லைக் தட் எனப் போகிறது. ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் உள்ளன. இந்த படம், தமிழ் டப்பிங் உடன் சோனி லிவ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.
படத்தின் பலவீனங்கள்:
- வழக்கமான திரைக்கதை
- சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள்
- சலிப்பை ஏற்படுத்தும் இசை மற்றும் படத்தொகுப்பு












Click it and Unblock the Notifications