ரூ.100 கோடி சம்பளம் வேணுமாம் நடிகருக்கு.. அப்ப படம் சக்ஸஸ்னு மாஸ் ஹீரோ கையெழுத்து போடுவாரா? பிரபலம்
சென்னை: தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை, நிச்சயமாக தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க ஹீரோக்கள் தயாரா? அப்படி தாங்கள் படம் சரியாக போகாவிட்டால், அந்த நஷ்டத்தில் பங்கெடுத்து கொள்வதாக, அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட ஹீரோக்கள் தயாரா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
கேளிக்கை வரியை மாநில அரசு இரட்டிப்பு செய்தது, சினிமா டிக்கெட்டுக்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தது உள்ளிட்ட காரணங்கள் கேரளா மாநில தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமததை உருவாக்கியிருக்கிறதாம்.

கேரளா மாநில சினிமா துறை ஸ்டிரைக்
எனவே, வரி குறைப்பு தொடர்பாக கேரள அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், வரும் ஜூன் 1ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள திரைப்பட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுபோன்ற ஒரு நிலைமை தமிழ் திரையுலகிற்கும் வருமா? என்பது குறித்து, Realone Media யூடியூப் சேனல் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டியின் முக்கிய சாராம்சம் இதுதான்:
"நடிகர்கள் தங்களது செலவுகளை குறைக்க வேண்டும், தயாரிப்பு செலவுகள் அதிகமாகிறது என்பதால், கடந்த 2024 அக்டோபர் 1ம் தேதியிலிருந்து எந்த புதுப்படமும் இனி தொடங்கக்கூடாது என்று தமிழ் சினிமாவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.. ஆனால், அந்த போராட்டத்தை சில நடிகர்களின் அழுத்தம் காரணமாக நடத்த விடவில்லை.
1 படம் ஓடிட்டாலே 3 கோடி ரூபாயா?
ஒரு சின்ன நடிகருக்கு, ஒரேயொரு படம் ஓடிவிட்டால், உடனே 2 கோடி, 3 கோடி என்று சம்பளம் கேட்கிறார்கள். கோடிகள் என்பது இவங்களுக்கெல்லாம் அவ்வளவு ஈஸியா இருக்கா? இப்படி கோடிகளில் சம்பளம் கேட்டுக் கொண்டிருந்தால், படம் எடுத்து லாபம் சம்பாதிக்கணும்னு வரும் தயாரிப்பாளர்கள் என்ன ஆவார்கள்? துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட வேண்டியதுதான்.
நடிகர்கள் எல்லாம் இப்போது பலகோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள்.. 1000 கோடி, 2000 கோடி, 5000 கோடி, 10,000 கோடி என்று அதிபதியாகிவிட்டார்கள்.. நான் யார் பேரையும் சொல்லல.. தமிழகத்தின் டாப் 10 நடிகர்கள் என்று எடுத்து கொண்டால், அவர்களிடம் பல்லாயிரம் கோடிகள் உள்ளன. இவர்கள் எல்லாம் இப்போது இன்ஃப்ளூயன்ஸர்களாக மாறிவிட்டார்கள்..
துண்டை காணோம் துணியை காணோம்
லைகா போன்ற பெரிய நிறுவனங்களை தவிர, தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் அப்படி யாருமே பல்லாயிரம் கோடிகளில் கிடையாது. கார்ப்பரேட், என்ஆர்ஐ தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக வெளியே அனுப்பியாச்சு..
ஒருபடத்தின் பிசினஸ் என்பது ஹீரோக்களை வைத்துதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.. உதாரணத்துக்கு ஒரு பெரிய ஹீரோ 200 கோடி சம்பளம் கேட்கிறார் என்று வைத்து கொள்வோம்.. 200 கோடி ஹீரோவுக்கு, பிறகு தயாரிப்புக்கு 200 கோடி என மொத்தம் 400 கோடி சொவு செய்தது, ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்தால், 40 கோடியாவது அவருக்கு லாபம் வர வேணாமா? 200க்கு 200 நஷ்டம் வந்தால், அந்த தயாரிப்பாளர் என்ன செய்வார்?
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட தயாரா
அப்படியானால், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முன்வரணும்தானே? சம்பளம் குறையும்போது, தயாரிப்பு செலவும் செலவும் குறையும்தானே? தயாரிப்பு செலவு குறைந்தால், அந்த படத்தின் நஷ்டத்தையும் தயாரிப்பாளர் தாங்கக்கூடிய சக்தி கிடைக்குமே?
தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை, நிச்சயமாக தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க ஹீரோக்கள் தயாரா? அப்படி அந்த படம் சரியாக போகாவிட்டால், அந்த நஷ்டத்தில் தான் பங்கெடுத்து கொள்வதாக, அக்ரிமென்ட்டில் கையெழுத்துப்போட ஹீரோக்கள் தயாரா?" என்று நறுக்கென கேட்டிருக்கிறார் பாலாஜி பிரபு.












Click it and Unblock the Notifications